`இப்படியெல்லாம் கொலை நடக்குமா?!' - ரவுடி உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி | Rowdy sheeter was murdered in a gruesome manner In Kurnool

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (09/11/2018)

கடைசி தொடர்பு:14:50 (09/11/2018)

`இப்படியெல்லாம் கொலை நடக்குமா?!' - ரவுடி உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி

ஆந்திராவில் உள்ள பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அவரின் இதயத்தைத் தனியாக வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ரவுடி கொலை

ஆந்திராவின் கர்நூல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சென்னையா. நேற்று முன்தினம் இரவு துங்கபத்ரா நதிக்கரைக்கு அருகில் ஓர் உடல் கிடப்பதாகக் காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது பிரபல ரவுடி சென்னையா என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலில் இதயம் மட்டும் தனியாக வெட்டி எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவத் தொடங்கியது. `சென்னையாவின் உடல் இன்னும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. சோதனையின் முடிவில் பல தகவல்கள் வெளியாகும். மேலும் சென்னையா முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம்’ என முதலில் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 

இதனிடையே ரவுடி சென்னையாவின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், இதுவரை இப்படி ஒரு கொலையை தாங்கள் பார்த்ததில்லை என்றும் இது மருத்துவ ரீதியாக நடைபெற்ற கொலை எனத் தெரிவித்துள்ளனர். மற்றொரு மருத்துவர், சென்னையாவின் மார்புப் பகுதிகள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்தில் மிகவும் கைத்தேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற செயலை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர். நேற்று இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய கர்நூல் டி.எஸ்.பி யுகந்தர் பாபு, ``சென்னையாவின் இதயம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக மருத்துவர்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. வெள்ளிக்கிழமைதான் அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. பிரேதப் பரிசோதனையின் முழுமையான அறிக்கை வந்த பின்னர்தான் இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார். ரவுடி சென்னையா மீது ஏற்கெனவே பல பிரிவுகளில் வழக்குகள் நிலுவையுள்ள நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற பிரேதப் பரிசோதனை பற்றி கருத்து தெரிவித்துள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர், ``சென்னையாவின் இதயம் தனியாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்றுக்காக அவரது இதயம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்கள், உறுப்பு வழங்குபவர் மற்றும் பெறுபவரின் விருப்பம் கேட்கப்படும். ஆனால் சென்னையாவுக்கு அப்படியில்லை” எனத் தெரிவித்துள்ளார். ஒருவரைக் கொலை செய்து அவரது உறுப்பைத் தனியாக எடுத்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.