வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (09/11/2018)

தேர்தல் பிரசாரத்தில் பிரிவினை பேச்சு! - எம்.எல்.ஏ பதவியைப் பறித்தது கேரள உயர் நீதிமன்றம்

தேர்தல் சமயத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ பதவியை அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியாகப் பறித்துள்ளது.

எம்.எல்.ஏ.  பதவி பறிக்கப்பட்ட ஷாஜி

கேரள மாநிலம் அழீக்கோடு தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஷாஜி. இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சி.பி.எம் வேட்பாளர் நிகேஷ் குமார் கேரள ஹைகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ``ஷாஜி தேர்தல் சமயத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்திய ஷாஜியின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க வேண்டும். மேலும் இரண்டாம் இடம் பிடித்த தன்னை எம்.எல்.ஏ-வாக அறிவிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட், இன்று வழங்கிய தீர்ப்பில் ஷாஜியை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தது. அதேநேரம் நிகேஷ்குமாருக்கு வழக்குச் செலவாக 50,000 ரூபாயை ஷாஜி வழங்க வேண்டும் எனவும், அழீக்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுள்ளது. மேலும், ஆறு ஆண்டுகளுக்கு ஷாஜி போட்டியிடக்கூடாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷாஜி கூறுகையில், ``சட்ட நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வேன்" என்றார்.