ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு `எதிரிகள் சொத்து'..! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? | What will happen to Jinnah House? Centre government to sell enemy shares

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:45 (09/11/2018)

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு `எதிரிகள் சொத்து'..! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு `எதிரிகள் சொத்து'..! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

டந்த 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்; ஆயிரக்கணக்கானோர் சொத்துகளை அப்படியே போட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்; இன்னும் சிலர் சீனாவுக்குச் சென்றனர். அப்படிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற சொத்து மதிப்பு மட்டும் இந்தியாவில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் இருக்கிறது. இந்தச் சொத்துகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போருக்குப் பிறகு, 1968-ம் ஆண்டு இவற்றைப் பாதுகாக்கும் வகையில் `எதிரிகள் சொத்துச் சட்டம்' இயற்றப்பட்டது. `நவாப்களின் நகரம்' என்று அழைக்கப்படும் லக்னோவில், எதிரிகளின் சொத்துகள் அதிகம். மும்பை மலபார் ஹில்லில், பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவுக்குச் சொந்தமான `ஜின்னா ஹவுஸ்' பங்களாவும் மத்திய அரசின்  கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த ஜின்னா ஹவுஸில்தான் பாகிஸ்தான் பிரிவினைக்கு அச்சாரமிடப்பட்டதாகச் சொல்வார்கள். பல ரகசியக் கூட்டங்களை இங்கே ஜின்னா நடத்தியதாகச் சொல்லப்பட்டதும் உண்டு. பாகிஸ்தானை உருவாக்கி ஜின்னா, அங்கே சென்றுவிட, இந்த பங்களாவில் யாரும் வசிக்கவில்லை.

அதே வேளையில் ஜின்னாவின் மகள் தினா, பிரபல தொழிலதிபர் நெவிலி வாடியாவை மணந்துகொண்டு இந்தியாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.  தினாவின் தாயாரும் ஜின்னாவின் மனைவியுமான ரத்தன்பாய் பெடிட், பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்.  தாய்வழி உறவில் தினா, நெவிலி வாடியாவை மணந்துகொண்டார். `பாம்பே டையிங்' நிறுவனத்தின் தற்போதைய தலைவர் நுஸ்லி வாடியாவின் தாயார்தான் இந்த தினா. தான் இந்தியர் ஒருவரை மணந்துள்ளதால் தந்தை ஜின்னா வசித்த ஜின்னா ஹவுஸ் பங்களாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தினா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், எதிரிகள் சொத்துகள் பட்டியலில் ஜின்னா ஹவுஸ் இடம்பெற்றிருப்பதால் வழக்கில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. 

ஜின்னா

இந்தியாவில் 9,400 எதிரிகள் சொத்துகள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும்மேல். மொத்தமுள்ள 9,400-ல் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 4,991 உள்ளன. மேற்குவங்கம் இரண்டாவது இடம்பிடிக்கிறது. இங்கு 2,735 சொத்துகள் உள்ளன. டெல்லியில் 487 சொத்துகள் இருக்கின்றன. சீனாவில் குடியேறியவர்களின் சொத்துகள் 126 உள்ளன. மேகாலயாவில் 57 மற்றும் மேற்குவங்கத்தில் 29 அசாமில் 7 இடங்களிலும் சீனாவில் குடியேறியவர்களின் சொத்துகள் உள்ளன. 

அதுபோல் ஏராளமான நிறுவனங்களும்  இருக்கின்றன. 996 நிறுவனங்களில் 20,323 பங்குதாரர்கள் 6,50,75,877 பங்குகளை விட்டுச்சென்றுள்ளனர். இந்த நிறுவனங்களில் 588 தற்போதும் இயங்கிவருகின்றன. அவற்றில் 139 பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள். இதில், ரூ. 3000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று நிதி திரட்ட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.  

இதற்காக 2016-ம் ஆண்டு எதிரிகள் சொத்துச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, அதை விற்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு அவையிலும் சட்டத்துக்கு ஒப்புதலும் பெறப்பட்டது. விற்கப்படும் எதிரிகள் சொத்துகளிலிருந்து திரளும் நிதியைக்கொண்டு  அகமதாபாத், ஜெய்ப்பூர், கௌஹாத்தி, திருவனந்தபுரம், மங்களுரு, லக்னோ விமானநிலையங்களில் முதலீடு செய்யப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த 6  விமான நிலையங்களும் பொது மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களாக மாற்றப்பட உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்