வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (10/11/2018)

கடைசி தொடர்பு:12:36 (10/11/2018)

சிக்னேச்சர் பாலத்தில் ஆபத்தான செல்ஃபி - அதிரவைக்கும் டெல்லிவாசிகள்

டெல்லி சிக்னேச்சர் பாலத்தின் மீது மக்கள் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுப்பது காவல்துறைக்குப் பெரும் தலைவலியாக உள்ளது.

 

செல்ஃபி

Credits: ANI

சீனாவில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான பாலத்தின் பெருமையை பேசிக்கொண்டிருந்த வேளையில் தான் ‘டெல்லி சிக்னேச்சர் பாலம்’ திறக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியையும், காஜியாபாத் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில் யமுனை ஆற்றின் குறுக்கே வாஜிராபாத்தில் பாலத்தைக் கட்டுவதுதான் திட்டம். 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கு 2007-ல் தான் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சுற்றுச்சூழல் துறை அனுமதி 2011-ல் தான் கிடைத்தது. இரண்டு வருடங்களில் பாலம் கட்டிமுடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் பாலத்தின் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைய 2017 ஆனது. ஒரு வழியாகக் கடந்த வாரம் நவம்பர் 4-ம் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

டெல்லி

Credits: ANI

பாலம் தான் திறந்தாயிற்று அப்புறம் என்ன போட்டோதான். பாலத்தில் பயணம் செய்யும் மக்கள் விதவிதமாக போட்டோ எடுக்க ஆரம்பித்துவிட்டார். செல்ஃபி மோகத்தினால் ஆபத்தை உணராமல் மக்கள் செய்யும் செயல் போக்குவரத்துத் துறை காவலர்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் வாகனத்தில் இருந்தபடியே உடலை வெளியில் நீட்டிக்கொண்டு செல்ஃபி எடுக்கின்றனர். மேலும் சிலரோ பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளின் மீது ஏறி செல்ஃபி எடுக்கின்றனர். ஆபத்தை உணராமல் மக்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காவு வாங்குகின்றன என்கின்றனர் காவல்துறையினர்.