`பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடைபட்டது!’ - ரகுராம் ராஜன் | RBI former governor says, demonetisation and gst plays an major role in drop of Indian economy growth

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (10/11/2018)

கடைசி தொடர்பு:19:11 (10/11/2018)

`பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடைபட்டது!’ - ரகுராம் ராஜன்

ஆர்.பி.ஐ யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

ரகுராம் ராஜன் 

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த, ரகுராம் ராஜன், பணி ஓய்வு பெற்ற பிறகு அமெரிக்காவில் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய திட்டங்கள் தான் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவுக்குக் காரணம் என விமர்சித்தார். 

இதுதொடர்பாக பேசிய அவர், ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகள் முக்கிய காரணம். 2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் வேகமாகச்  சென்று கொண்டு இருந்தது. ஆனால் மேற்சொன்ன இரண்டு திட்டங்களுக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின்னடைவைச் சந்தித்தது. உலக பொருளாதாரமே வளர்ச்சிப் பாதையில் இருந்தபோது இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது. 2017 -ம் ஆண்டில் உலக பொருளாதாரம் முன்னேறிய தருணத்தில் இந்திய பொருளாதாரம் கீழே சென்றது.

வருடத்துக்கு 7 சதவிகித வளர்ச்சி என்பது நல்ல வளர்ச்சிதான். ஆனால் நிஜத்தில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போதாது. மக்களின் வேலை வாய்ப்புத் தேவைகளை பூர்த்தி செய்வது இயலாத காரியம்; அது தான் உண்மை. இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல முயலும்போது, கச்சா எண்ணெயின் விலை உயர்வால் மீண்டும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியா, தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவில் இறக்குமதியை நம்பியிருப்பதால் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளது” என்றார். 

குராம் ராஜன் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகளை விமர்சிப்பது இது முதன்முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.