வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (11/11/2018)

கடைசி தொடர்பு:09:49 (11/11/2018)

பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாளில் என்ன நடந்தது... ரிசர்வ் வங்கி விளக்கம்!

அந்த கேள்விகளுக்கு விடை சொல்லும்விதமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழித்து அன்றைய தினம் என்ன நடந்தது என்று ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. அதுகுறித்து, அன்றைய தினத்தில் நடைபெற்ற கூட்டம் குறித்த 'மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்' குறிப்பினை வெளியிட்டுள்ளது. பணமதிப்பு நீக்க அறிவிப்பை மோடி வெளியிட இருந்த நவம்பர் 8, 2016 அன்று மாலை 5.30 மணியளவில் ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து அலசப்பட்டு இறுதியில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாளில் என்ன நடந்தது... ரிசர்வ் வங்கி விளக்கம்!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்த அன்று உண்மையில் என்ன நடந்தது, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்ததா, இல்லையா என்பதுகுறித்து பலருக்கும் கேள்விகள் இருந்து வந்தன. அந்த கேள்விகளுக்கு விடை சொல்லும்விதமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழித்து அன்றைய தினம் என்ன நடந்தது என்று ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. அதுகுறித்து, அன்றைய தினத்தில் நடைபெற்ற கூட்டம் குறித்த 'மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்' குறிப்பினை வெளியிட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு அறிவிப்பை மோடி வெளியிட இருந்த நவம்பர் 8, 2016 அன்று மாலை 5.30 மணியளவில் ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து அலசப்பட்டு இறுதியில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மத்திய நிதியமைச்சகத்தின் சார்பாக இரண்டு காரணங்கள் கூறப்பட்டன. முதலாவதாக, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நடவடிக்கையின்மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்று கூறப்பட்டது. ஏனெனில், பெரும்பாலான கறுப்புப் பணம், பணக்கட்டுகளாக இருப்பதில்லை, மாறாக, சொத்துக்களாக மாற்றப்பட்டிருக்கும். குறிப்பாக, தங்க நகைகளாக, நிலங்களாக, கட்டடங்களாக வாங்கப்பட்டிருக்கும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைமூலம் இவற்றை ஒன்றும் செய்ய இயலாது. எனினும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை 'பாராட்டத்தக்கது' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அடுத்ததாக, கள்ள நோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. கள்ள நோட்டுக்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் சுமார் 400 கோடி ரூபாய் அளவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலுள்ள மொத்த பணத்தோடு ஒப்பிடுகையில் இதன் சதவிகிதம் மிகவும் குறைவே. எனவே இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுகளை ஒழிப்பதென்பது தேவையில்லாத ஒன்றெனக் கருதப்பட்டது.

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக இந்தியாவின் மருத்துவத்துறையும், சுற்றுலாத்துறையும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்த்தார்கள். குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பணத்தை மாற்ற இயலாமல், பயன்படுத்த இயலாமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. மேலும், பயணத்திற்காக பேருந்து, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்தும்போதும் அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கல் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, இந்த நடவடிக்கைக்குப் பிறகு சிறிதுகாலத்திற்கு நாட்டின் ஜி.டி.பி. விகிதம் பாதிக்கப்படும் என்றும், தொழில்துறையும் பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பணமதிப்பிழப்பு

ஆக, ரிசர்வ் வங்கி கணக்கிட்டது போலவே நாட்டின் ஜி.டி.பி.யில் பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்பைக் காணமுடிந்தது. அதேபோல சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தார்கள். வங்கிகளில், ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்காக நீண்ட நேரத்திற்கு வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக முதியவர்கள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் ஏற்பட்டன. சிறு, குறு தொழில்கள் பல இந்த திடீர் நடவடிக்கையை எதிர்கொள்ள முடியாமல் முடங்கின. அதன் காரணமாக பலருக்கு வேலையிழப்பும் ஏற்பட்டது.  

பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட நன்மை என்று பார்த்தால், வங்கிக்கணக்குகள் புதிதாக நிறைய ஏற்படுத்தப்பட்டன, வங்கிவழி பணப்பரிமாற்றமும், ஆன்லைன் பணப்பரிமாற்றமும் ஓரளவு அதிகரித்தது. வருமான வரித்தாக்கல் அதிகரித்தது. அதன்காரணமாக வருமான வரி வசூலும் அதிகரித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்ததுபோல கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பிடிபடவில்லை. கிட்டத்தட்ட, செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்ட பணம் முழுவதுமே வங்கிக்குத் திரும்பியது. எனவே வங்கி மேலாளர்கள் உதவியோடு கறுப்புப்பணம் வெள்ளையாக மாற்றப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது.

தற்போது சந்தேகத்திற்குரிய வங்கிக்கணக்குகள் கண்காணிக்கப்பட்டு, பணம் சம்பாதித்த விவரம் கேட்டு பலருக்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படலாம். சிறைத்தண்டைனையும் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆக பணமதிப்பிழப்பு என்பது மத்திய அரசைப் பொறுத்தவரை புலி வாலைப் பிடித்த கதை தான். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் மன உளைச்சலுக்கும் பதில் தருவதைப் பொறுத்தே அடுத்த தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்பதே எதார்த்தம்.