`குடியரசுத் தலைவரின் பெயரில் கடிதம்!’ - 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆர்.டி.ஐயால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை | release of convicts in the Rajiv Gandhi assassination case letter was not sent to the President

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/11/2018)

கடைசி தொடர்பு:16:00 (11/11/2018)

`குடியரசுத் தலைவரின் பெயரில் கடிதம்!’ - 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆர்.டி.ஐயால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க அனுப்பப்பட்ட கடிதம் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் அவரின் பெயரிலேயே பதில் அனுப்பப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. 

ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 25 வருடங்களாகப் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலைத் தொடர்பான விவாதங்கள் கோரிக்கைகள் போன்றவை நீண்ட நாள்களாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான இறுதி தீர்ப்பில் ஏழு பேரின் விடுதலைத் தொடர்பாக ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் அதன் பேரில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கூறப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் உள்ள ஏழு பேர் தரப்பிலும் தமிழக அரசு சார்ப்பிலும் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருவதாக ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏழு பேரின் விடுதலைத் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நீண்ட காலமாக மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இந்த கடிதத்துக்கு மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் எனக் கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு தமிழக அரசின் மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதாகக் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில் தமிழக அரசின் கடிதம் நிராகரிக்கப்பட்டதுக்கான விளக்கத்தைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தரப்பினர் குடியரசு தலைவர் மாளிகைக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர். இதன் பதிலில் ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. ‘இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது. தமிழக அரசின் கடிதம் எதுவும் இங்கு வரவில்லை’ என குடியரசுத் தலைவர் மாளிகை பதிலளித்துள்ளது. பிறகு மத்திய அரசு அளித்த விளக்கத்தில்,‘ பேரறிவாளன் உள்பட ஏழு பேர் நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்த தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்தால் அது மற்றவர்களுக்குத் தவறான முன் உதாரணமாகிவிடும் என சி.பி.ஐ தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதனால் கடிதம் நிராகரிக்கப்பட்டது” என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், குடியரசு தலைவர் பெயரில் அவர் எழுதியதாகத் தமிழக அரசின் கடிதத்துக்கு மத்திய அரசு பதில் கடிதம் எழுதியதும் ஆர்.டி.ஐ மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது. 

‘மிகவும் இக்கட்டான சுழலில் மிகவும் குறைவாகவே குடியரசுத் தலைவரின் கடிதத்தை மத்திய அரசு பயன்படுத்தும். ஆனால் ஏழு பேரின் விடுதலைத் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் மத்திய அரசே நிராகரித்துள்ளது உண்மைக்குப் புறம்பான செயல். குடியரசுத் தலைவர் பார்வைக்குக் கொண்டுசெல்ல முடியாத அளவு இதில் என்ன உள்ளது’ என பேரறிவாளன் தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.