`கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே துபாய் பயணம்!’ - கெஜ்ரிவாலை சாடும் பாஜக | Arvind Kejriwal's dubai trip has come under the fire from opposition BJP

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (11/11/2018)

`கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே துபாய் பயணம்!’ - கெஜ்ரிவாலை சாடும் பாஜக

தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே கெஜ்ரிவால் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளதாக பா.ஜ.க விமர்சித்து வருகிறது. 

அரவிந்த் கெஜ்ரிவால்

தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் துபாய் பயணம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லியில் நிலவிவரும் காற்று மாசுபாட்டினால் ஒரு மணிநேரத்துக்கு 45 சிகரெட்டுகள் வெளியிடும் புகையின் அளவுக்கு இணையான மாசுக் காற்றைக் குழந்தைகள் சுவாசித்து வருகின்றனர். இந்நிலையில், கெஜ்ரிவால் தன் மனைவியுடன் துபாய் சென்றுள்ளார். இதை அவரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை என நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி, ``டெல்லியில் பொதுமக்கள் மூச்சு விடக்கூடச் சிரமப்படும் வேளையில் முதல்வர் துபாய் சென்றுள்ளது நியாயமா?. நன்கொடை என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் திட்டத்தில் கையெழுத்திடவே அவர் துபாய் சென்றுள்ளார்’’ என கடுமையாக விமர்சித்துள்ளார். இவரின் கருத்தை மறுத்து அதற்குப் பதிலளித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. அதில் தன்னுடன் பயின்ற சக நண்பரின் இல்ல விழாவில் பங்கேற்கவே கெஜ்ரிவால் துபாய் சென்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.