3 மணி நேர தொடர் விசாரணைக்குப் பின் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! | Janardhan Reddy arrested by Bengaluru Central Crime Branch

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (11/11/2018)

கடைசி தொடர்பு:07:10 (12/11/2018)

3 மணி நேர தொடர் விசாரணைக்குப் பின் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது!

நிதி மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுத் தலைமறைவாக இருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜனார்த்தன ரெட்டி

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற மிகப் பெரும் போன்ஸி ஊழல் வழக்கில் சையது அகமது ஃபரீத் என்பவரையும் அவரின் மகன் சையது அஃபக் அஹமது ஆகிய இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. 

இதையடுத்து முன்னாள் அமைச்சரை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாகிவிட்டார். நான்கு தனிப்படைகள் அமைத்து முக்கிய நகரங்களில் குற்றப்பிரிவு அதிகாரிகள் அவரைத் தேடினர். இதற்கிடையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜனார்த்தன ரெட்டி, ‘ நான் தவறாக எதுவும் செய்யவில்லை. நான் தவறானவன் என்பதை நிரூபிக்கக் காவல்துறையினரிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அவதூறு பரப்பப்படுகிறது’ என கூறியிருந்தார். 

பிறகு இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சிட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஜனார்த்தன ரெட்டி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், டி.ஜி.பி கிரிஷ் மற்றும் ஏ.சி.பி வெங்கடேஷ் ஆகியோர் அரசியல் அழுத்தங்களால் விசாரணை நடத்துவார்கள். எனவே, அவர்கள் தன்னை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என மற்றொரு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஜனார்த்தன ரெட்டி போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, அவரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்ட அவருக்கு, வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.