மத்திய அமைச்சர் அனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார் | Union Minister Ananth Kumar passes away

வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (12/11/2018)

கடைசி தொடர்பு:08:19 (12/11/2018)

மத்திய அமைச்சர் அனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்

பெங்களூரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார்.

அனந்தகுமார்

மத்திய ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சீரானதும் பெங்களூரு திரும்பினார். நோயின் தாக்கம் இருந்ததால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி அனந்த் குமார் (வயது 59) உயிரிழந்தார். 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் கர்நாடகாவில் வசித்து வந்தார்.

சதானந்த கவுடா தனது இரங்கலில், என் நண்பர், சகோதரர் அனந்த் குமார் இறப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. என்னால் நம்பமுடியவில்லை என தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``அனந்த் குமாரின் இறப்புச் செய்தி துயரத்தைக் கொடுத்தது. பா.ஜ.க-வுக்காக நெடுங்காலம் பணியாற்றியவர். அவரது இறப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையைக் கடவுள் அவர்களது குடும்பத்தினருக்கு கொடுக்கட்டும்” எனத் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.