`ஆண்மையற்றவர்’ என்று அழைப்பது அவதூறு’ - எச்சரித்த மும்பை உயர் நீதிமன்றம் | Calling husband 'impotent' is defamation: Bombay HC

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (12/11/2018)

`ஆண்மையற்றவர்’ என்று அழைப்பது அவதூறு’ - எச்சரித்த மும்பை உயர் நீதிமன்றம்

`ஆண்மையற்றவர்’ என்று அழைப்பது அவதூறு’ - எச்சரித்த மும்பை உயர் நீதிமன்றம்

குடும்ப வழக்குகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில், ‘கணவனின் சம்பளத்தை மனைவி அறிந்துகொள்ள உரிமை உள்ளது' உள்ளிட்ட  சட்ட திருத்தங்களைக் கொண்ட நுட்பமான தீர்ப்புகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. இதேபோன்ற ஒரு தீர்ப்பை சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

உயர் நீதிமன்றம்

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், நாக்பூரைச் சேர்ந்த ஆணும் திருமணம் செய்துகொண்டு, கிட்டத்தட்ட ஓராண்டு வாழ்ந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்தப் பெண் தன் மகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பலமுறை இருவருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்று தோற்ற நிலையில், அந்தப் பெண் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இவர்களின் மகளை சில காலம் தந்தையிடம் ஒப்படைக்குமாறு  உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த அந்தப் பெண், தன் கணவர் ஆண்மையற்றவர் என்றும், இந்தக் குழந்தை மாற்று மகப்பேறு முறையில் பிறந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால், அந்தப் பெண்ணின் கணவர் அவர் மீது சட்டப்பிரிவு 500 (அவதூறு குற்றம்) மற்றும் 503 (மிரட்டல் குற்றம்) ஆகியவற்றின் கீழ் புகார் அளித்துள்ளார்.

இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தில், தன் குழந்தை மாற்று மகப்பேறு வழியில் பிறந்தது என்று குறிப்பிடவே, கணவர் ஆண்மையற்றவர் என்பதைக் கூற நேர்ந்தது என்று அந்தப் பெண் விளக்கம் அளித்தார்.

உயர் நீதிமன்றம்

ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் அவரின் தரப்பை ஏற்க மறுத்து, அந்தப் பெண் தாக்கல் செய்த மனுவில் தன் கணவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற தொனியும், மிரட்டல் விடுக்கும் நோக்கமும் உள்ளதாகக் குறிப்பிட்டு, அவர் மீது முதல்கட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து  மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ``ஆண்மையற்றவர்’ என்ற வார்த்தையை இலக்கணம் ரீதியாகவும் நடைமுறையாகவும் புரிந்துகொள்ளும் பட்சத்தில், ஒருவரின் ஆண்மைக்குப் பாதகம் விளைவிப்பதாகவும் மற்றவர்கள், சம்பந்தப்பட்ட நபரை ஏளனமாகப் பேச வழிவகுப்பதாகவும் இருக்கிறது என்றும், இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது,  சட்டப்பிரிவு 499 கீழ், முதல்கட்ட சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு 500 கீழ், இந்த வார்த்தை பிரயோகத்தை அவதூறு பரப்பும் செயலாகக் கருதி, சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் மனுவை மும்பை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க