வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (12/11/2018)

கடைசி தொடர்பு:23:30 (12/11/2018)

சபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களை பின்தொடரும் பிரச்னைகள்!

சபரிமலை சந்நிதானத்துக்குச் செல்ல முயன்ற பெண்களுக்கு எதிராக அவர்கள் பணிபுரியும் இடங்களில் சென்று போராட்டம் நடத்துவதால் நாளுக்குநாள் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சரணகோஷ போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இளம் பெண்கள் சந்நிதானம் செல்ல முயன்றனர். அவர்களை இந்து அமைப்பினர் சரணகோஷ போராட்டம் நடத்தித் தடுத்தனர். அதன் பிறகும் அந்தப் பெண்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தபோது சந்நிதானத்துக்குச் செல்வதற்கு முயன்ற ரஹானா பாத்திமா பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து பலமுறை இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் எங்கெல்லாம் மாற்றலாகிச் சென்றாரோ அந்த அலுவலகங்கள் முன்பு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் ரஹானா பாத்திமா மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து முன்ஜாமீனுக்காக அவர் நீதிமன்றத்துக்கு அலைந்துவருகிறார்.

ரஹனா பாத்திமா

அதுபோன்று சபரிமலைக்குச் சென்ற பெண்களில் ஒருவரான அரசுப் பள்ளி ஆசிரியை பிந்து தங்கம் கல்யாணி நிம்மதி இல்லாமல் அல்லாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் இருந்து மாற்றல் வாங்கிக்கொண்டு அட்டப்பாடி அகழி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடர்கிறார். அகழி பள்ளியில் முதல்நாள் வகுப்புக்குச் செல்லும்போதே சரணகோஷம் முழங்கி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிந்துவை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் பணிபுரியும் பள்ளிக்கு எதிரே பல்வேறு போராட்டங்களையும் ஐயப்ப கர்ம சமிதி நடத்திவருகிறது. ``அரசு கூறியதாலேயே பிந்து சபரிமலைக்குச் சென்றார். தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மனம் வேதனைப்படும்படி சமூக தளங்களில் பதிவிடுகிறார். அட்டப்பாடியில் பக்தர்களைச் சீர்குலைக்கவே பிந்து வந்திருக்கிறார்" என்று கூறுகிறார்கள் போராட்டக்காரர்கள். ``கர்ம சமிதி என்ற பெயரில் சங்கபரிவார் ஆதிவாசிகளைத் தவறாக வழிநடத்தி தனக்கு எதிராகத் திருப்பி விடுகிறார்கள்" என்று ஆதங்கப்படுகிறார் பிந்து. பிந்துவுக்கு எதிராக இன்று அகழி அரசுப் பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. சபரிமலை சந்நிதானம் செல்ல முயன்ற பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.