வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (13/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (13/11/2018)

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்!

திருச்சியில் நடைபெறும் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் வட மாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராணுவ ஆள் சேர்ப்புக்கு குவிந்த வாலிபர்கள்

இந்திய ராணுவத்தின் பிரிவாக விளங்கும் திருச்சி 117 பிரதேச ராணுவப்படையில் 57 சிப்பாய்கள், ஒரு கிளார்க், ஒரு சலவைப் பணியாளர் உள்ளிட்ட  59 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் கடந்து ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில இளைஞர்கள் முதல்நாள் இரவில் இருந்தே, திருச்சியில் குவிந்தனர். இரவு தங்குவதற்கு இடமில்லாமல், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகம், ரயில்வே மைதானம், ராணுவ மைதானம் உள்ளிட்ட இடங்களில் படுத்துக்கிடந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு தேர்வு தொடங்கியது. அதையடுத்து, இளைஞர்கள் அங்கு குவிந்தனர்.  பத்து மற்றும் 12-ம் வகுப்பு வரை கல்வித்தகுதி கொண்ட இந்த முகாமில் ஏராளமான பட்டதாரிகளும் கலந்துகொண்டனர்.

அப்போது, இந்திய கர்னல் எஸ்.ஏ.நவுகான் தலைமையில் சுபேதார் முரளிகிருஷ்ணன் உட்பட ராணுவ அதிகாரிகள், முதல் நாளான நேற்று தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் உடற்தகுதி தேர்வு நடைபெறுவதாகவும், மற்ற மாநில இளைஞர்களுக்கு இன்று மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஒலிபெருக்கியில் அறிவித்தனர். இதையடுத்து நேற்று முழுவதும் தமிழக இளைஞர்களுக்கு உடற்தகுதி சோதனைகள் நடத்தப்பட்டன. வரிசையாக நிறுத்தப்பட்ட இளைஞர்களுக்கு மைதானத்துக்குள் வரும்போதே 160 செ.மீ. உயரமுடையவர்களை மட்டும் அனுமதித்தனர். இதில் பாதி இளைஞர்கள் நிராகரிக்கப்பட்டனர். 

அதையடுத்து 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தண்டால் எடுத்தல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றன. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. முதல்நாளான நேற்று மட்டும், 7,000 இளைஞர்கள் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டதாகவும், அதில் 3,264 பேர் மட்டும் மைதானத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் உடலில் பச்சை குத்தியிருந்த 700-க்கும் மேற்பட்ட இளைஞர்களை, பச்சை குத்தியவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவதில்லை என்கிற விதிப்படி நிராகரிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், உடற்தகுதி தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், நேற்று அறிவித்தபடி வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதன்முதலாக முதற்கட்ட உடற் தகுதித் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர். இந்த முகாம் வருகிற 17-ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், உடற்தகுதி தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்தகட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவப் பரிசோதனை நடைபெறும் என்றும், அப்படி மருத்துவ பரிசோதனை தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சில மாதங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

இந்த நிலையில், திருச்சியில் நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் உயரம் அளக்கப்பட்டு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், இன்று நடைபெறும், வட மாநிலத்தவர்களுக்கான தேர்வில் உயரம் அளக்கப்படாமல் நேரடியாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திருச்சி 117 பிரதேச ராணுவப்படையில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ராணுவத்தில் ஆள் தேர்வு செய்வதில் கடந்த காலங்களில் ஆள்மாறாட்டம், மோசடிகள் உள்ளிட்டவை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின்படி, அப்படியான குற்றச்சாட்டுகளைத் தடுக்கும் வகையில் உடற்தகுதி தேர்வை வீடியோ பதிவு செய்து வருவதாகவும், உடற்தகுதி தேர்வில் பாரபட்சமாக நடக்கவில்லை'' எனக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்கள்.

ராணுவத்தில் ஆட்கள் தேர்வு செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக இந்த முறையும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க