பெயர்கள் மாற்றம்... இறைச்சி, மதுவுக்குத் தடை- என்ன செய்கிறார் யோகி ஆதித்யநாத்? | yogi adityanath plans to ban meat and liquor in faizabad and mathura

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (13/11/2018)

கடைசி தொடர்பு:12:25 (13/11/2018)

பெயர்கள் மாற்றம்... இறைச்சி, மதுவுக்குத் தடை- என்ன செய்கிறார் யோகி ஆதித்யநாத்?

ஃபைசாபாத் நகரத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் `அயோத்தியா’ என்னும் பெயர் மாற்றத்தை அறிவித்தார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். தற்போது `அயோத்தியா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அப்பகுதியிலும், உத்தரபிரதேசத்தின் வேறு சில கோயில்கள் நிறைந்த பகுதிகளிலும், இறைச்சியையும் மதுவையும் தடைசெய்ய இருப்பதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

யோகி ஆதித்யநாத்

இறைச்சி, மது ஆகியவற்றை தடை செய்வதற்கான காரணம் குறித்துக் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், ``மாநிலத்தின் பல புனித இடங்களில் வசிக்கும் துறவிகள் இறைச்சிக்கும், மதுவுக்கும் தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். உதாரணமாக ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் இருக்கும் சாதுக்கள் இறைச்சிக்கும், மதுவுக்கும் தடை விதிக்குமாறு கேட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், ``மக்களின் விருப்பத்துக்கேற்ப அலகாபாத் நகரத்தின் பெயர் `பிரயாக்ராஜ்' என மாற்றம் செய்யப்படும்" என்று கடந்த மாதம் அறிவித்தார். அதற்குப் பிறகு,ஃபைசாபாத்தை அயோத்தியா எனப் பெயர் மாற்றம் செய்திருக்கிறார் ஆதித்யநாத். ``அயோத்தியா என்னும் பெயர் நமது மரியாதை, பெருமை, குலப்பெருமைக்கான குறியீடு. அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது. கடவுள் ராமனின் புகழ் இங்கு எப்போதும் இருப்பதை உறுதி செய்வேன்” எனப் பெயர் மாற்றத்துக்கு விளக்கத்தையும் கொடுத்திருந்தார். மாநிலங்களின், நகரங்களின் பெயர் மாற்றங்களில் அதிக கவனம் செலுத்திவரும் பா.ஜ.க அரசு, அதன் கட்சித் தலைவரான அமித் ஷாவின் பெயர் பாரசீக மொழிப் பின்புலம் கொண்டிருப்பதால் அதை மாற்றுவதைப் பற்றியும் யோசிக்கலாம் என வரலாற்று அறிஞர், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் நேற்று தெரிவித்திருந்தார்.

அயோத்தியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஃபைசாபாத்திலும், மதுரா மற்றும் உத்தரப்பிரதேச கோயில் பிரதேசங்களிலும் இறைச்சி, மது தடை அமல்படுத்தப்பட்டால் பலரின் வேலைவாய்ப்பு பறிபோவதுடன், கணிசமான இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் மோசமடையும் என்று அம்மாநிலத்திலுள்ள செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டுமா, மாறாக சாமியார்களின் விருப்பங்களா?
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க