ரஃபேல் ஒப்பந்தம்: மத்திய அரசு, அனில் அம்பானி மீதான குற்றச்சாட்டு நீங்குமா? | 74 int meetings took place before inking rafale deal centre government tells supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (13/11/2018)

கடைசி தொடர்பு:16:00 (13/11/2018)

ரஃபேல் ஒப்பந்தம்: மத்திய அரசு, அனில் அம்பானி மீதான குற்றச்சாட்டு நீங்குமா?

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசு, அனில் அம்பானிக்குச் சாதகமாக நடந்துள்ளது என்பதுதான் எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ச்சியாக மறுத்துவந்தாலும் அதை ஆதாரபூர்வமாக மத்திய அரசோ, பிரதமர் மோடியோ விளக்கம் தரவில்லை. இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இறுதியாவதற்கு முன்பாக இந்திய பேச்சுவார்த்தைக் குழு (INT) 74 சந்திப்புகள்மூலம் பலதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்புதான் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனில் அம்பானி

கடந்த 2015 மே மாதத்திலிருந்து 2016 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இந்த 74 சந்திப்புகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 48 சந்திப்புகள், இந்திய பேச்சுவார்த்தைக் குழு தங்களுக்குள்ளாக நடத்திய ஆலோசனைக் கூட்டமென்றும், 26 சந்திப்புகள், பிரான்ஸ் அரசாங்கம் மற்றும் ராணுவ அமைச்சகத்துடன் நடத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த சந்திப்புகளில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்த 'மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்' பதிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில், இந்தியா, பிரான்ஸ் இருதரப்பு மட்டத்தில், மிக நீண்ட அளவில் பலகட்டமாக நடத்தப்பட்டுள்ள ஆலோசனைக்கூட்ட விவரங்களை முற்றிலும் போலியாகத் தயாரிப்பது சாத்தியமில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் இந்த விவரங்களை ஆய்வு நடத்தினால் ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்குச் சாதகமாக மத்திய அரசு குறுக்கீடு செய்துள்ளதா என்பதை அறியமுடியும் என்று நம்பப்படுகிறது.