`ஜனவரி 22 முதல் மீண்டும் விசாரணை!’ - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புதிய முடிவு | Supreme Court agrees to hear review petitions in Sabarimala Temple case

வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (13/11/2018)

கடைசி தொடர்பு:16:36 (13/11/2018)

`ஜனவரி 22 முதல் மீண்டும் விசாரணை!’ - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புதிய முடிவு

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

சபரிமலை

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்ப கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என முன்னதாக பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட ஐந்து பேர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நீண்ட நாள்களாக விசாரித்து இறுதியில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம். கோயிலுக்குச் செல்ல பாலின பாகுபாடு இல்லை என்று தீர்ப்பளித்தனர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு கேரளா உட்பட தென் மாநிலங்களும் கண்டம் தெரிவித்தன. இதையடுத்து கடந்த மாதம் ஐப்பசி பூஜைக்காகக் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் பலர் சந்நிதானத்தின் வாசலில் நின்று போராட்டம் நடத்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று கேரள பிராமணர்கள் சங்கம், ஐயப்ப பக்தர்கள் சங்கம் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று புதிய தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் ஒவ்வொரு மனுவையும் தனித்தனியாக விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார். வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் பெண்கள் கோயிலுக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.