பிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு! | monkey snatched the infant in agra later baby found dead

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (13/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (13/11/2018)

பிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு!

பிறந்து 12 நாளே ஆன குழந்தையை குரங்கு ஒன்று தூக்கி சென்றுள்ளது. இதில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

குரங்கு

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சுற்றி நிறையக் கோட்டைகள் பல சுற்றுலா தளங்கள் உள்ளன. இதேப் போன்று அங்கு குரங்குகளும் அளவுக்கு அதிகமாக உள்ளன. அங்குள்ள குரங்குகள், சுற்றுலா வரும் பயணிகளின் உடைமைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் பறித்து கொண்டு போகும் எனப் பல செய்திகளை நாம் கேட்டிருப்போம். குரங்குகள், சிலரின் பணத்தை பறித்த சம்பவங்களும் உள்ளது. ஆனால் தற்போது மிகவும் வருத்தமான சம்பவம் நடைபெற்றுள்ளது. 

நேற்று ஆக்ராவின் மொஹல்லா கச்சேரா என்ற நகரில் சன்னி என்ற பெண் பிறந்து 12 நாள்கள் மட்டுமே ஆன தன் பச்சிளம் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ஒரு குரங்கு தாயிடம் இருந்த குழந்தையை தூக்கிச் சென்று ஓடியுள்ளது. இதையடுத்து தாய் கூச்சலிடத்தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் குரங்கை பிடிக்கத் துரத்தினர். பின்னர் அருகில் இருந்த ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ரத்தம் சிந்திய நிலையில் குழந்தை தரையில் கிடந்துள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குத் தூக்கி சென்றுள்ளனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை முன்னதாகவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இருந்தும் இதை நம்பாத குடும்பத்தினர் வேறு ஒரு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கி சென்றுள்ளனர். அங்கும் இதே பதிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது பற்றி பேசிய அக்கம் பக்கத்தினர், “ஆக்ராவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அவை பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் அச்சுறுத்தி வருகிறது. திருட்டு, கொல்லை போன்ற சம்பவங்கள் குரங்குகளால்தான் அதிகம் நடக்கின்றன. மொட்டை மாடியில் யாரும் தைரியமாக நடமாக முடியாத சூழல் நிலவிவருகிறது. இங்குள்ள வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவை இரும்பினாலே மூடப்பட்டுள்ளது. சிறிது நேரம் ஜன்னலைத் திறந்துவைத்து வெளியில் சென்றால் குரங்குகள் வீட்டுக்குள் புகுந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.