வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (14/11/2018)

கடைசி தொடர்பு:16:31 (14/11/2018)

`பால்கனியில் இருந்து அவளைத் தூக்கி வீசு’ - காதலி உத்தரவால் மனைவியைக் கொன்ற கணவன்

ஹரியானாவில் வங்கி ஊழியர் கொலையில் மூளையாக செயல்பட்ட கணவனின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை - காதலி


ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீபிகா (32). இவர் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 27-ம் தேதி இரவு, 8-வது மாடியிலுள்ள இவரது குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரின் கணவர் விக்ரம் சிங் சவுகானை கைது செய்தனர். விக்ரம் சிங்குக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தீபிகாவுக்குத் தெரியவரவே கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாகப் பிரச்னை இருந்துவந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விக்ரம் தன் மனைவியை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை அதிகாரி கூறுகையில், ``இந்த விவகாரத்தில் விக்ரமுக்கு அவரின் காதலி கொடுத்த அழுத்தமே தீபிகாவின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. இது அவரின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. விக்ரம் மற்றும் அவருடைய காதலி இருவருக்கும் இடையேயான உரையாடலை ஆராய்ந்தபோது அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில மாதங்களாக மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே விக்ரம் இருந்துள்ளார். இந்தக் கொடூர எண்ணத்துடனே தன் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரின் காதலியும் விக்ரமிடம், ‘ஒன்று அவளை விவாகரத்து செய் அல்லது கொலை செய்துவிடு’எனக் கூறியதும் தெரியவந்துள்ளது.

தன் கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் தீபிகாவுக்குத் தெரியவந்துள்ளது. விக்ரமின் பர்ஸில் இரண்டு சினிமா டிக்கெட்டுகள் இருந்துள்ளன. இதிலிருந்து விக்ரம் மீது தீபிகாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தன் கணவருக்கு ஷிபாலி என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலை நடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தீபிகா - விக்ரம் இருவரும் நைனிதாலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். தீபிகா தன் கணவர் திருந்திவிட்டார் அதன் காரணமாக சுற்றுலா அழைத்து வந்துள்ளார் என எண்ணியிருக்கலாம். ஆனால், விக்ரம் தன் மனைவியைக் கொலை செய்யும் நோக்கில்தான் நைனிதாலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் இந்த விவரம் தெரிகிறது. நைனிதாலில் இருவரும் 10 நாள்கள் தங்கியுள்ளனர். சுற்றுலா முடிந்து வந்ததும் தன் திட்டம் நிறைவேறாதது குறித்து காதலிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். `தீபிகா உயரமான மலைச்சிகரங்களுக்கு வர மறுத்துவிட்டார். அவளுக்கு உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை' எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷிபாலி, `நீ தோற்றுப்போனவன்' (Loser) எனக் கூறியுள்ளார். 

சம்பவத்தன்று தீபிகாவுக்கும், விக்ரமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தீபிகாவை விக்ரம் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதையடுத்து தன் காதலிக்கு மெசேஜ் செய்துள்ளார். வீட்டில் கடுமையான சண்டை அவளைத் தாக்கிவிட்டேன். அவள் நரகத்தில் இருப்பதுபோல் கத்துகிறாள் எனச் செய்தி அனுப்புகிறார். ஷிபாலி அதற்கு நீ அவளை பால்கனியில் இருந்து தள்ளிக் கொன்று விடு என்கிறார். அவள் கத்திக்கொண்டே இருக்கிறாள்.. நான் அதைத்தான் செய்யப்போகிறேன்.. எனக் கூற.. அப்படி என்றால் இப்போதே கொன்றுவிடு எனப் பதில் அனுப்பியுள்ளார். தீபிகாவை பால்கனியில் இருந்து தள்ளிவிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இந்த உரையாடல்கள் நடந்துள்ளது” என்றார். இந்த விவகாரத்தில் விக்ரமின் காதலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.