வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (14/11/2018)

கடைசி தொடர்பு:16:02 (14/11/2018)

ஃப்ளிப்கார்ட் சி.இ.ஓ பின்னி பன்சால் ராஜினாமாவுக்குக் காரணம் #Metoo-வா?!

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வால்மார்ட் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இந்த விவகாரம் குறித்து தங்களிடம் தெரிவிக்காமல் பின்னி பன்சால் மறைத்துவிட்டார் என வால்மார்ட் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பின்னி பன்சால், ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து  திடீரென ராஜினாமா செய்திருப்பது, வணிகத் தளங்களில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமாவுக்கு, பாலியல் புகாரே காரணம் எனத் தெரியவந்துள்ளது. 

பின்னி பன்சால்

ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை, சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள். வெறும் 4 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை, அவர்கள் இருவரும் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக உருவாக்கினர். 

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவிகிதப் பங்குகளை உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அண்மையில் வாங்கி, அதை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. அப்போதே அந்த நிறுவனத்திலிருந்து சச்சின் பன்சால் வெளியேறிய நிலையில், ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பின்னி பன்சால் பணியாற்றிவந்தார். 

தற்போது தவறான நடத்தை காரணமாக, ஃபிளிப்கார்ட் குழு தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும், பன்சாலுக்குப் பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமைச் செயல் அதிகாரி பணியைக் கவனிப்பார். ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் செயல்பாடுகளுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, இனி ஆடை விற்பனை வலைதளங்களான மைந்த்ரா (Myntra) மற்றும் ஜபாங் (Jabong) உள்ளிட்ட இணைய வியாபாரப் பிரிவுகளுக்கான தலைமை நிர்வாகியாகயும் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜினாமா ஏன்? 

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், அந்த நிறுவனம் தொடங்கியதிலிருந்தே முக்கிய இடம் வகித்துவந்தார். ஆனால், சமீபகாலமாக நடந்த நிகழ்வுகள், அவருக்கும் வால்மார்ட் நிறுவனத்துக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பன்சால் ராஜினாமாவுக்குத் தனிப்பட்ட தவறான நடத்தையே காரணம் என்று வால்மார்ட் தெரிவித்துள்ளபோதிலும், அது என்ன குற்றச்சாட்டு என்பதை அந்த நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், 2016-ம் ஆண்டு பன்சால் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டும், அது தொடர்பான விசாரணையும்தான் அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என அந்த நிறுவனத்தின் உள்வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. 

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வால்மார்ட் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இந்த விவகாரம் குறித்து தங்களிடம் தெரிவிக்காமல் பின்னி பன்சால் மறைத்துவிட்டார் என வால்மார்ட் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பன்சால் மறுப்பு

பின்னிக்கு எதிராகப் பாலியல் புகார் கூறிய முன்னாள் பெண் ஊழியர், கடந்த ஜூலை மாதம் வால்மார்ட் தலைமைச் செயல் அதிகாரி டக் மெக்மில்லனின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றதாகவும், அதன் பிறகே வால்மார்ட்டுக்கு இதுகுறித்து தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. 

சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் 2012-ம் ஆண்டே ஃப்ளிப்கார்ட்டிலிருந்து வெளியேறி, 2016-ம் ஆண்டில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றைத் தொடங்கி நடத்திவந்ததாகவும், அப்போது அவர் பன்சாலைச் சந்தித்துப் பேசியதாகவும், அதன் பிறகே பாலியல் குற்றச்சாட்டைக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வால்மார்ட்

இந்நிலையில், பின்னி பன்சாலுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தங்கள் கவனத்துக்குத் தெரியவந்ததும், அதுகுறித்த விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு,  ``இவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதனால், பின்னி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. ஆனால், இது அவர் மீதான மற்ற குறைபாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறது" எனத் தெரிவித்திருந்தது.

இந்தக் குற்றசாட்டை, பின்னி பன்சால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி வால்மார்ட் விடுத்துள்ள அறிக்கையில், ``பின்னி பன்சால் மீது தனிப்பட்ட தவறான நடத்தைப் புகார்கள் எழுந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் மீதான புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் கவனத்தைச் சிதறடித்துவிடும் எனக் கருதி அவர் விலகியுள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பாலியல் புகாரில் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிக்கிய நிலையில், பிரபல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒருவர் அதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கி பதவி விலக நேரிட்டிருப்பது, தொழில் துறையினரிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்