வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (14/11/2018)

கடைசி தொடர்பு:07:05 (15/11/2018)

`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்!’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்

வங்கி ஊழியர் தீபிகா தன் கணவனால் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தீபிகா

ஹரியானாவில் குருகிராம் பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீபிகா, தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த அக்டோபர் 27-ம் தேதி இரவு, 8-வது மாடியிலுள்ள இவரது குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரின் கணவர் விக்ரம் சிங் சவுகானை கைது செய்தனர். விக்ரம் சிங்குக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தீபிகாவுக்குத் தெரிய வரவே கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாகப் பிரச்னை இருந்துவந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விக்ரம் தன் மனைவியைப் பால்கனியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும், இந்த விவகாரத்தில் இன்று, போலீஸாரால் விக்ரமின் காதலி ஷிபாலி கைது செய்யப்பட்டார். காதலியின் தூண்டுதலின் பெயரிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது, அவர்களின் வாட்ஸ்அப் உரையாடல் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. விக்ரம், தீபிகாவை கடந்த சில நாள்களாகவே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக மலைப் பகுதிக்குச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மலைப் பகுதியில் தன்னால் ஏறமுடியாததால் தீபிகா வர மறுத்துள்ளார். அதனால் அந்தக் கொலை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததுக்காக, விக்ரமின் காதிலி, விக்ரமைக் கடுமையாகத் திட்டியுள்ளார். 

இந்த நிலையில், தீபிகா கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, ``என்னைக் கொன்றுவிடாதீர்கள். நமது குழந்தைகளை நான் அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காக நான் இருக்க வேண்டும்’’ என்று கெஞ்சியிருக்கிறார். இந்தத் தகவலை அந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இவைதான் தீபிகாவின் கடைசி வார்த்தைகள் எனப் போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தக் கொலையை அவர் தனியாகச் செய்திருக்க வாய்ப்பு குறைவு. அவருடன் மர்ம நபர் யாரோ இருந்திருக்கிறார் என்னும் தகவலும் போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால், அந்தத் தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இந்தத் தகவல்களைத் தந்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை எனப் போலீஸார் தெரிவித்தனர். 

விக்ரம், தன் பெற்றோர்கள், வீட்டிலிருந்து கிளம்புவதற்காகக் காத்திருந்து, அதன் பின்னர் மனைவியைப் பால்கனிக்கு அழைத்து வந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.