வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (14/11/2018)

கடைசி தொடர்பு:07:08 (15/11/2018)

`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி!’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்

`இஸ்ரோவின் பாகுபலி’ என்றழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி மார்க் - 3 டி2 ராக்கெட், தகவல் தொடர்புக்குப் பயன்படும் ஜிசாட்-29 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. 

இஸ்ரோ


ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஏவுவதற்கான 26 மணிநேர கவுண்டவுன் நேற்று மதியம் 2.50 மணிக்குத் தொடங்கியது. இன்று மாலை மாலை சரியாக 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டால், செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், புயல் பாதிப்பு இல்லாததால் திட்டமிட்டபடி ஜிசாட் 29 விண்ணில் ஏவப்பட்டது. 

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுமையத்திலிருந்து ஏவப்படும் 67-வது செயற்கைக்கோள் இதுவாகும். அதேபோல், இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 33-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்ற பெருமையையும் இதுபெற்றது. 3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட் 29 செயற்கைக்கோள் 36,000 கி.மீ தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தச் செயற்கைக் கோள் 10 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும்.  

ஜிசாட்-29 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக அறிவித்த இஸ்ரோ தலைவர் சிவன், `இந்த வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவால் சாத்தியமானது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் கிராமப் பகுதிகள் மற்றும் நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு இணைய சேவையை இந்தச் செயற்கைக் கோள் உதவியுடன் வழங்கலாம்’ என்றார்.

இஸ்ரோ

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி2 ராக்கெட்:

ஜிசாட்-29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 டி2 ராக்கெட்`இஸ்ரோவின் பாகுபலி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டின் மொத்த எடை 641 டன் ஆகும். இது, 5 பயணிகள் விமானத்தின் முழு எடைக்குச் சமமானது. 43 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 13 மாடி கட்டடத்தைவிட உயரமானது. செயற்கைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் இஸ்ரோவின் ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டதான ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 டி2 ராக்கெட் கருதப்படுகிறது. அதேநேரம், இஸ்ரோ ராக்கெட்டுகளில் உயரம் குறைந்தது இதுதான். இந்த ராக்கெட்டை வடிவமைக்க இஸ்ரோவுக்கு 15 ஆண்டுகள் கால அவகாசம் பிடித்தது. அதேநேரம், ஒவ்வொரு முறை இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ ரூ.300 கோடி அளவுக்கு பட்ஜெட் வேண்டும். ஜிசாட்-29 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் பயன்பாட்டுக்கு வந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

4 டன் எடை அளவு கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் திறன்படைத்த ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் விண்கலத்தை ஏவப் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல், விண்வெளிக்கு மனிதர்களை முதன்முறையாக அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும் இந்த ராக்கெட்டையே இஸ்ரோ பயன்படுத்தவிருக்கிறது.