வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (15/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (15/11/2018)

ரூ.350 கோடியில் காவிரி அன்னைக்கு சிலை! - கர்நாடகா அமைக்கிறது

காவிரி அன்னைக்கு, ரூ.350 கோடி மதிப்பீட்டில் சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது. 

காவிரி சிலை

மாண்ட்யா  மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுப் பகுதியில், இந்தச் சிலை அமைக்கப்படுகிறது. 125 அடி உயரத்தில் அமையும் இந்தச் சிலைமீது ஏறி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டின் அழகை ரசிக்க முடியும். காவிரி அன்னையின் சிலைக்கு அருகில், மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையாருக்கும் சிறிய அளவிலான சிலை உருவாக்கப்படுகிறது.  இரண்டு சிலைகள் அமைவதால், இந்தப் பகுதியில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும்  என்று கர்நாடக அரசு நம்புகிறது. அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட் போல இந்தப் பகுதியை மாற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவில், நேற்று நடைபெற்ற கர்நாடக மாநில நீர்வளத் துறை , சுற்றுலாத் துறை அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில், சிலைகள் எழுப்புவதுகுறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில், காவிரி அன்னைக்கு சிலை எழுப்புவது குறித்து அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. முதல்கட்ட ஆய்வுப்பணிக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் கூறுகையில், '' சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னிலேண்ட் போன்ற பகுதி உருவாக்கப்படும். இதற்காக, ரூ. 1000 முதல் ரூ. 2000 கோடி வரை செலவிடத் திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக, கர்நாடகாவின் தாயான காவிரி அன்னைக்கு சிலை அமைக்கிறோம். பெண் ஒருவர் கையில் வைத்திருக்கும் பானையிலிருந்து  நீர் கொட்டுவது போன்று சிலை  வடிவமைக்கப்படும்'' என்றார். 

காவிரி அன்னையின் சிலை அமைக்கப்பட்டால், தென் மாநிலங்களிலேயே உயர்ந்த சிலையாக அது அமையும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க