அவ்னி புலி குட்டிகளின் நிலை! - வனத்துறை அதிகாரிகள் புதுத் தகவல் | Tigress Avni Cubs Found Alive

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (15/11/2018)

கடைசி தொடர்பு:18:50 (15/11/2018)

அவ்னி புலி குட்டிகளின் நிலை! - வனத்துறை அதிகாரிகள் புதுத் தகவல்

சமீபத்தில் கொல்லப்பட்ட அவ்னி புலியின் குட்டிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அது தொடர்பாக மகாராஷ்டிரா அதிகாரிகள் புதுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அவ்னி குட்டிகள்

File Photo

மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா காட்டுப் பகுதியையொட்டி, சில கிராமங்கள் உள்ளன. காட்டுக்குள் வரும் மனிதர்களை 6 வயது பெண் புலி ஒன்று தொடர்ந்து தாக்கிவந்தது. இந்தப் புலிக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. வனத்துறையினர் இந்தப் புலிக்கு அவ்னி என்று பெயரிட்டிருந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018 ஆகஸ்ட் மாதம் வரை 13 பேரை தாக்கிக் கொன்றுள்ளது அவ்னி புலி. இதனால், அந்தக் கிராம மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அவ்னி புலியை சுட்டுக்கொல்லும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட குழு, மூன்று மாதங்களாக ட்ரோன் மூலம் தேடி, கடந்த 2-ம் தேதி இரவு புலியை சுட்டுக் கொன்றதாக அறிவிக்கப்பட்டது. அவ்னி சுடப்பட்டதற்கும் வனத்துறையினருக்கும் எதிர்ப்பு தெரிவித்து, பல விலங்குகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புலியை சுட்டுக் கொல்வதற்குப் பதிலாக மயக்க மருந்து கொடுத்து பிடித்திருக்கலாம் என்ற கருத்தும் அவ்னி இறந்த பிறகு அதன் குட்டிகளின் நிலை என்னாகும் என்ற கருத்தும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. அவ்னியின் இரு குட்டிகளும் நரமாமிசத்தைச் சாப்பிட்டு பழகியிருந்ததோடு, தாய்ப் புலி மனிதர்களை வேட்டையாடுவதையும் அவை பார்த்திருந்தன. பின்னாளில், மிகக் கொடிய உயிர்க்கொல்லிகளாக இந்தக் குட்டிகள் மாறும் அபாயம் உள்ளது. இதனால், அவ்னி குட்டிகளைப் பிடித்து சிறையில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தும் கூறப்பட்டது. 

இதையடுத்து, அவ்னி புலியின் குட்டிகளைத் தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் மகாராஷ்டிரா வனத்துறை அதிகாரி ஏ.கே மிஸ்ரா. ”அவ்னி புலியின் குட்டிகள் மிகவும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளன. அவை மனிதர்களை வேட்டையாடுகிறதா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்தக் குட்டிகள், தன் தாய் வேட்டையாடுவதைப் பார்த்திருக்கும். எனவே, வருங்காலத்தில் இவை மனிதர்களை வேட்டையாடலாம்; இல்லாமலும் போகலாம். எப்படியிருந்தாலும், அவற்றின் பழக்கத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.