வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (16/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (16/11/2018)

ஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த கிராமத்துக்குரல் - `ஓ செலியா' பேபிக்கு அடித்தது சினிமா சான்ஸ்!

ஓ செலியா பாடிய ஆந்திரப் பெண்ணுக்கு சினிமா சான்ஸ் அடித்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளி வந்த `காதலன்' படத்தில் இடம் பெற்ற `என்னவளே என்னவளே' என்ற பாடலின் தெலுங்கு வெர்ஷனான `ஓ செலியா' என்ற பாடலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குரலில் பாடி அசத்தினார். இந்த வீடியோவை யாரோ  யூடியூப் சேனலில் வெளியிட ஒரே நாளில்  பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு.' என்னை ஈர்த்த அந்தக் குரல் யாருடையது என்று தெரியவில்லையே. ஆனால் அருமையான குரல்' என்று பதிவிட்டிருந்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய  ஆந்திரப் பெண் பேபி

தற்போது அந்தப் பாடலைப் பாடிய பெண் யாரென்பது தெரிய வந்துள்ளது. ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வடிசேலரு என்ற கிராமத்தைச் சேர்ந்த பேபி என்ற பெண் என்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் இணையத்தில் பிரபலமான அந்தப் பெண்ணுக்கு ஏ.ஆர். ரஹமான் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ... உடனடியாக தெலுங்குப் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பிரபல தெலுங்குப் பட இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ், தன் படத்தில் பாட பேபிக்கு பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். பிற்காலத்தில் பேபிக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

இதற்கு முன்னதாக இதே போன்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்தது. விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற `உனை காணாது நான் ' என்ற பாடலை கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற இளைஞர் பாடி அது இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பாடலைப் பாடிய சங்கர் மாகதேவன் ராகேஷ் உன்னியைப் பாராட்டினார். நடிகர் கமல்ஹாசனும் கேரளா சென்ற போது ராகேஷ் உன்னியைச் சந்தித்து உரையாடியது நினைவு கொள்ளத்தக்கது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க