``தீர்ப்பை நிறைவேற்ற கால அவகாசம் கேட்கும் தேவசம்போர்டு” - சபரிமலை விவகாரத்தில் புதிய திருப்பம் | In Sabarimala issue devasom board took important decision

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (16/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (16/11/2018)

``தீர்ப்பை நிறைவேற்ற கால அவகாசம் கேட்கும் தேவசம்போர்டு” - சபரிமலை விவகாரத்தில் புதிய திருப்பம்

'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்ற தீர்ப்பை நிறைவேற்ற கால அவகாசம் கேட்டு நாளை அல்லது திங்கள்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக தேவசம்போர்டு தலைபர் பத்மகுமார்

மண்டல, மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறந்தது. அய்யப்பன் கோயில் புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படி வழியாக சந்நிதானம் சென்றனர். இரண்டு மேல்சாந்திகளும் பொறுப்பேற்கும் சடங்குகள் நடந்தன.  மேலும், திருநடை வளாகத்தில் ஆளி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் தேவை என மனு கொடுக்க தேவசம்போர்டு கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம். சபரிமலை பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்ய, கூடுதல் வனப்பகுதி தேவை என கோர்டில் கூற உள்ளோம். பக்தர்கள் அமைதியாகத் தரிசனம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம். சுப்ரீம் கோர்ட் விதியை செயல்படுத்த கால அவகாசம் வேண்டும் என நாளை அல்லது திங்கள் மனுதாக்கல் செய்வோம். தேவசம்போர்டு கூட்டத்தில் எங்களால் முடிந்த அளவு தீர்மானம் எடுத்தோம். இரவு 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்கக் கூடாது, பக்தர்கள் தங்கக் கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகளை நீக்க, அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இன்று இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்க மாட்டோம்" என்றார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த கால அவகாசம் கேட்பதன்மூலம் தற்போதைய போராட்டங்களும் பரபரப்புகளும் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது.