வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (16/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (16/11/2018)

நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கமிஷனர் காருக்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்!

நோ பார்க்கிங்கில் நின்ற கமிஷனரின் வாகனத்துக்கு அபராதம் விதித்துள்ளது ஹைதராபாத் டிராஃபிக் போலீஸ். 

நோ பார்க்கிங்

தெலங்கானாவின் மஹான்கலி போக்குவரத்து காவல் நிலையம் அருகில் நேற்று மாலை 3 மணியளவில் ஒரு வாகனம் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ளது. அதை அப்பகுதி பத்திரிகையாளர் ஒருவர் புகைப்படமெடுத்து, ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் `இந்த வண்டி நோ பார்க்கிங்கில் நின்றதற்காக அபராதம் விதிக்க முடியுமா? இடம் : மஹான்கலி போக்குவரத்து காவல் நிலையம், நேரம் : மாலை 3 மணி, நாள் : நவம்பர் 15, 2018’ எனப் பதிவிட்டிருந்தார். 

நோ பார்க்கிங்கில் நின்றது அப்பகுதி கூடுதல் துணை போக்குவரத்து கமிஷனர் அனில் குமாருடைய வண்டி என பிறகு தெரியவந்துள்ளது. தெலங்கானாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மஹான்கலி போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக அவர் நேற்று வந்துள்ளார். அப்போதே அவரது வண்டி நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த வண்டிக்கு அபராதம் விதித்த இணைய ரசீதை ஹைதராபாத் காவல்துறை தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பிறகு பத்திரிகையாளர் பதிவிட்ட புகைப்படத்தை நீக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து பல நெட்டிசன்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், “நோ பார்க்கிங்கில் நின்ற வாகனம் தெலங்கானா அரசு பெயரில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த அபராதத் தொகை கமிஷனரின் சொந்த பணத்தில் இருந்து செலுத்தப்படுமா அல்லது அரசு பணம் அதாவது மக்கள் வரிப் பணத்தில் செலுத்தப்படுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரைத்தொடர்ந்து மற்றொருவர், “கமிஷனர் வாகனமாக இருந்தாலும் அவருக்கு அபராதம் விதித்த ஹைதராபாத் போலீஸுக்கு பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.