`அது எங்களுக்கே சர்ப்ரைஸ்தான்!’ - #Deepveerwedding மைசூர்பா பரிசு குறித்து ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் எம்.டி | Ranveer-deepika couple sends Sri Krishna sweets Mysore Pak to friends

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (16/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (16/11/2018)

`அது எங்களுக்கே சர்ப்ரைஸ்தான்!’ - #Deepveerwedding மைசூர்பா பரிசு குறித்து ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் எம்.டி

ரன்வீர், தீபிகா திருமணத்தில் பரிசாக வழங்கப்பட்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுக்கு பாலிவுட்டில் உருகி வருகின்றனர்.

 

ரன்வீர் தீபிகா

கோவையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். குறிப்பாக, கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பா பயங்கர ஃபேமஸ். இந்நிலையில், பாலிவுட்டின் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இருவரின் திருமணம் கடந்த 14, 15-ம் தேதிகளில் மிகப் பிரமாண்டமான முறையில் இத்தாலியில் நடைபெற்றது.

இதற்காக, சக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்களுக்கு, புதுமண தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டது. இதை, பிரபலங்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்கள்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா

 “ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவுக்கு மிகப் பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும் தீபிகா ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி” என்றும் “அவர்களது திருமணப் புகைப்படங்களைவிட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போதே வேண்டும்" என்றும் ``மைசூர்பாவில் காணாமல் போன *க்* பற்றிய எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்துவிட்டது" என்று ட்விட்டரில் மைசூர்பாவுக்கு கரைந்து வருகின்றனர்.

இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், ``ஓர் முக்கியமான பிரபலத்துக்காக மைசூர்பா மொத்தமாக தேவை என எங்களது பெங்களூரு கிளையைத் தொடர்புகொண்டு வாங்கினார்கள். அப்போது தீபிகா படுகோன் ரன்வீர் தம்பதியின் திருமண கொண்டாட்டத்துக்குதான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. திரை நட்சத்திரங்களும் முக்கியஸ்தர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும் கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான் தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துகள்’’ என்றார்.