வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (17/11/2018)

கடைசி தொடர்பு:14:20 (17/11/2018)

கொலையில் முடிந்த கருணை - டெல்லி ஃபேஷன் டிசைனருக்கு நேர்ந்த சோகம்!

டெல்லியை ஆட்டிப் போட்டிருக்கிறது ஃபேஷன் டிசைனர் மாலா லக்கானியின் கொலை. சிறைக்கைதி ஒருவர் மீது கருணை காட்டிய மாலா கடைசியில் அவர் கையால் கொலை செய்யப்பட்டதுதான் சோகத்தின் உச்சம்.

டெல்லி ஃபேஷன் டிசைனர்

டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் மாலா லக்கானி. டெல்லியின் பிரபல ஃபேஷன் டிசைனர். இதே பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் அன்வர் (வயது 24). கடந்த ஆண்டு சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்ததாக ராகுல் அன்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியின் பெற்றோரை மாலாவுக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். ராகுல் அன்வர் மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருந்த மாலா, சிறுமியின் பெற்றோரிடத்தில் பேசி வழக்கை வாபஸ் வாங்க வைத்தார். இதனால், ராகுல் சிறையிலிருந்து விடுதலை ஆனார். சிறையில் இருந்து வெளியானதும் அவருக்கு டெய்லர் வேலையும் மாலா கொடுத்தார். வேலைக்கு வந்து செல்வதற்காக மோட்டார் சைக்கிளும் அவருக்கு வாங்கிக் கொடுத்திருந்தார்.

கைர்க்ய் செய்யப்பட்ட கொலையாளிகள்

இந்நிலையில், துணிகள் தைப்பதற்கு வழங்கப்பட்ட கூலி தொடர்பாக மாலாவுக்கும் அன்வருக்கும் தகராறு இருந்துள்ளது. இதனால் மாலா மீது ஆத்திரமடைந்த அன்வர் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தார். தன் நண்பர்கள் வாசிம், ரஹ்மத் ஆகியோரிடத்தில் கொலை திட்டத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று பேரும் கடந்த புதன்கிழமை இரவு 10 மணி அளவில் மாலாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். மாலாவை வெளியே கூப்பிட்ட ராகுல் அன்வர், அவரிடத்தில் சில உடைகளைக் காட்ட வேண்டுமென்றும் கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியே வந்த மாலாவை மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். மாலாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டு வாட்ச்மேன் பகதூர் தடுக்க ஓடி வந்துள்ளார். அவரையும் கத்தியால் குத்திக் கொன்றனர். பகதூர் உடலில் 18 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. கொலையாளிகள் அதிகாலை 2.45 மணிக்கு டெல்லி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து மாலாவின் சகோதரி ஆர்த்தி கூறுகையில், 'என் சகோதரி மிக அழகாக இருப்பாள். முகத்தில் சிறிய பரு வந்தால்கூட தாங்கமாட்டாள். கொலையாளிகள் என் சகோதரியின் முகத்தைக்கூட கத்தியால் குத்தி சிதைத்துள்ளதை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை'' என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்தவரை மீட்டு, பின்னர் அவரால் கொலை செய்யப்பட்ட மாலாவின் கதை டெல்லி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க