வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (17/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (17/11/2018)

கஜா ஓயவில்லை... அரபிக்கடலில் நிலைகொண்டு கேரளாவைத் தாக்குகிறது!

மிழகத்தைத் தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது கஜா புயல். 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான வாழைகள், தென்னை மரங்கள் நாசமடைந்துள்ளன. பொதுச்சொத்துகள் கோடிக்கணக்கில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக நாகை, கடலூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வழக்கமாக, தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள்தான் புயலால் பாதிக்கப்படும். ஆனால், இந்த கஜா புயல் உள் தமிழ்நாட்டையும் தாக்கியது. புயலைப் பார்த்திராத திண்டுக்கல் நகரைக்கூட கஜா விட்டுவைக்கவில்லை. இதனால், திண்டுக்கல் நகரத்திலும் ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் சுழற்காற்றின் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்துவிழுந்தன. மழையும் கொட்டித்தீர்த்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

கஜா புயல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை வங்கக்கடலில் உருவான  புயல், சிறிது சிறிதாக வலுவடைந்து,  நேற்று முன்தினம் வேதாரண்யம் அருகே அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. பின்னர், தமிழகத்தின் உள்புறமாகப் புகுத்து திண்டுக்கல் வழியாக கேரளா நோக்கிச் சென்றது. தற்போது, அரபிக்கடலில் கஜா வலுகுறைந்து நிலைகொண்டுள்ளது.  இதன் காரணமாக, திங்கள்கிழமை வரை  கேரளாவில் மழை பெய்யும். 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கேரளா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலைகள் 2.8 மீட்டர் உயரத்துக்கு எழக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக, இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை வலுத்துவருகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மூணாரிலும் பலத்த மழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை வரை கஜா காரணமாக கேரளாவில் மழை பெய்யும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க