‘12 வருடங்களாகப் பதப்படுத்தப்பட்ட 5 பழங்குடியினரின் கைகள்?’ - ஒடிஷா போலீஸை அதிரவைத்த சம்பவம் | 10 chopped palms found in Kalinga Nagar area at Odisha

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (19/11/2018)

கடைசி தொடர்பு:08:43 (19/11/2018)

‘12 வருடங்களாகப் பதப்படுத்தப்பட்ட 5 பழங்குடியினரின் கைகள்?’ - ஒடிஷா போலீஸை அதிரவைத்த சம்பவம்

ஒடிஷாவில், வெட்டப்பட்டு பதப்படுத்தப்பட்ட ஐந்து ஜோடி கைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. 

ஒடிஷா பழங்குடியினர்

PhotoCredits : @OrissaPOSTLive

ஒடிஷா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கலிங்க நகர் பகுதியில் உள்ள ஒரு கிளப்பில், வெட்டப்பட்ட ஐந்து ஜோடி கைகள் கிடப்பதாக நேற்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், கிளப்புக்கு வெளியே சிதறிக் கிடந்த கைகளைச் சேகரித்து விசாரணை நடத்தினர். வெட்டப்பட்ட கைகள், ரசாயனம் நிறைந்த ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டுள்ளது என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு, ஒடிஷாவின் கலிங்க நகர் பகுதியில் டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, அப்பகுதி பழங்குடியினர் பெரும் போராட்டத்தை நடத்தினர். அப்போது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது கலிங்க நகர் கிளப்பில் கிடைத்த கைகள், போராட்டத்தில் இறந்த பழங்குடியினரின் கைகளாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்துப் பேசிய ஜெய்ப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் மீனா, “ நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு யாரோ ஒருவர் கிளப்பின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று, அங்குள்ள பதப்படுத்தப்பட்ட கைகளை எடுத்து வெளியில் வீசியுள்ளார். 2006 போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது கிடைத்துள்ள கைகள் அவர்களுடையதாக இருக்கலாம். இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும்போது, அவர்களின் கைரேகைகளை அழிக்கும் நோக்கில் மருத்துவர்களே இறந்தவர்களின் கைகளை வெட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கலிங்க நகரில் தற்போது வாழும் பழங்குடியினர், இந்தச் சம்பவம் தொடர்பாக டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எதற்காக இவ்வாறு நடைபெற்றது எனத் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார். 

எதற்காக கைகள் வெட்டப்பட்டன, அவை உண்மையில் யாருடையது, தற்போது எதற்காக யாரோ ஒருவர் ஜன்னலை உடைத்து கைகளை வெளியில் வீச வேண்டும் என்பன போன்ற கேள்விகள் போலீஸாரை பெரும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.