வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (19/11/2018)

கடைசி தொடர்பு:10:00 (19/11/2018)

சபரிமலையில் திடீர் போராட்டம் நடத்திய பக்தர்கள்! - நள்ளிரவில் அதிரடி கைது

போலீஸ் கட்டுப்பாட்டை எதிர்த்து சபரிமலையில் போராட்டம் நடத்திய பல பக்தர்கள் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும், பல பிரச்னைகள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஐப்பசி பூஜைக்காகக் கடந்த மாதம் ஐந்து நாள்கள் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பெண் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து, சந்நிதான வாயிலில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர். பின்னர் நிலக்கல், பம்பை மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த போராட்டத்தில், சுமார் 2000-த்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

சபரிமலை விவகாரத்தில், கேரள பா.ஜ.க-வுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் நிலவிவருகிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு பின்பற்றும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, கேரளாவின் கொச்சி, அரன்முலா, கொல்லம், ஆழப்புலா, ரன்னி, மலப்புரம் போன்ற பல இடங்களிலும் நேற்று பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை

முன்னதாக, சபரிமலை வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்த பின்னர், கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அமர்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பர். ஆனால், தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களால் பம்பை முதல் கோயில் வரை போலீஸ் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டதால் சபரிமலை வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று நள்ளிரவு, சுமார் 100 பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பஜனை பாடிக்கொண்டிருந்தனர். கலைந்து செல்லுமாறு போலீஸார் அவர்களிடம் கூறினர். இதற்கிடையே, போலீஸாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் திடீரென போலீஸைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70 பக்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம், கேரளாவில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச்செய்துள்ளது.