வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (19/11/2018)

கடைசி தொடர்பு:12:50 (19/11/2018)

சந்நிதானத்தை நோக்கி முன்னேறும் பெண் தலைவர்! - பதற்றத்தில் சபரிமலை

பரிமலை கோயிலில் மகரவிளக்கு காலத்துக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதையடுத்து, பெண் சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை செல்ல முயன்றுவருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திரிப்தி தேசாய், சபரிமலை செல்ல கொச்சி வந்தார். விமான நிலையத்தில் நடந்த முற்றுகை காரணமாக அவரால் சபரிமலை செல்ல முடியவில்லை. 'மீண்டும் சபரிமலை செல்வதற்கு கேரளா வருவேன்' என்று கூறிவிட்டு திரிப்தி தேசாய் தற்போது புனே திரும்பியுள்ளார்.

சபரிமலை செல்லும் சசிகலா

'கேரள இந்து ஐக்கிய வேதி' என்ற அமைப்பின் தலைவர் சசிகலா,இப்போது  சபரிமலை செல்ல முயன்றார். சனிக்கிழமை திருவல்லாவில் அவரைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரன்னி போலீஸ் நிலையத்தில் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். தன்னை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டுமென்று கூறி போலீஸ் நிலையத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தார்..

சசிகலா போலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் 2000-க்கும் மேற்பட்டவர்கள், ரன்னி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சசிகலாவை ஐயப்பனைத்  தரிசனம் செய்யவைக்க வேண்டும். அவரைக் கைதுசெய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, போராடி வரும் பெண் போராளிகளைப் பிரபல வங்கதேச எழுத்தாளர் தஷ்லீமா நஸ்ரின் கண்டித்துள்ளார். இதுகுறித்து ட்விட் செய்துள்ள தஸ்லீமா, 'பெண் போராளிகள் ஏன் சபரிமலை செல்ல இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அதற்குப் பதிலாக, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உதவலாம். பெண்களுக்கு உதவலாம். கல்வி கிடைக்காத பெண்களுக்காகப் போராடலாம். பெண்கள் சுகாதாரத்துக்காக ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கப் போராடலாம். பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப் போராடலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டு ஜாமீனிவில் விடுவிக்கப்பட்ட சசிகலா, இன்று காலை சபரிமலை சந்நிதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார். சசிகலா கையில் தன் பேரக் குழந்தையை வைத்துள்ளார். ஆதரவாளர்களும் அவருடன் செல்கின்றனர். சசிகலா சந்நிதானத்தை நெருங்குகையில் என்ன நடக்குமோ என்கிற பதற்றம்  நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க