வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (19/11/2018)

கடைசி தொடர்பு:16:50 (19/11/2018)

``5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி, தோல்வி யாருக்கு..?''

``5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றி, தோல்வி யாருக்கு..?''

'5 மாநிலத் தேர்தல் முடிவுகள்' எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. த்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சத்தீஸ்கர் தவிர, ஏனைய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போது சூடுபிடித்திருக்கிறது. பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகள் இடையேதான் கடுமையான போட்டி என்றாலும், அந்தந்த மாநிலங்களுக்கான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேறு சில மாநிலக் கட்சிகளும் ஒருசில இடங்களைப் பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் ஒரே கட்டமாக வரும் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் கடந்த 12-ம் தேதி முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக, நவம்பர் 20-ம் தேதி 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

அடுத்த ஆண்டில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது நடைபெறும் ஐந்து மாநில  சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை, பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இதேபோல் நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். எனவே, தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியும், ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் கட்சியும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

ராகுல்காந்தி - சந்திரபாபு நாயுடு - 5 மாநிலத் தேர்தல்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? அரசியல் பார்வையாளரும், பிரசன்னம் மூலம் நாட்டுநடப்புகளை கணித்து வருபவருமான வேலூரைச் சேர்ந்த எஸ்.லோகேஷ்பாபு, சென்னையில் நம்முடன் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.லோகேஷ் பாபு

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ்பாபு, பல்வேறு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை ஏற்கெனவே கணித்திருக்கிறார். இதற்கு முன்னர் இவர் சொன்ன தேர்தல் கணிப்புகள், அப்படியே நடந்திருக்கின்றன. ``2016-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் கட்சியை உடைப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. 105 இடங்களைப் பிடிக்கும் பி.ஜே.பி, ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில், தினகரனுக்கு பாதகமாகவே இறுதித் தீர்ப்புவரும்" போன்ற ஆரூடங்களை தன்னுடைய பிரசன்ன கணிப்பின்மூலம் சொல்லியிருந்தார். அவர் கணித்தது அப்படியே நடந்தது. தற்போது, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து லோகேஷ் பாபு என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

மத்திய பிரதேசம் (230 தொகுதிகள்):

``மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் கடந்த 13 ஆண்டுகளாக பி.ஜே.பி. ஆட்சி நடக்கிறது. அந்தக் கட்சிக்கு 180, 160 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 120 எம்.எல்.ஏ-க்களே கிடைப்பார்கள். என்றாலும் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மீண்டும் முதல்வர் பதவியேற்பார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி 100 எம்.எல்.ஏ.,க்களுக்கும் அதிகமான இடங்களைப் பிடித்து, மத்திய பிரதேசத்தில் வலுவான எதிர்க்கட்சியாக உருவாகும்".

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - 5 மாநிலத் தேர்தல்

ராஜஸ்தான் (200 தொகுதிகள்):

``முடிசூடா ராணிபோல் ஆட்சிசெய்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியாவின் சாம்ராஜ்யம் இந்தத் தேர்தலில் முடிவுக்கு வருகிறது. ராஜஸ்தானில் பி.ஜே.பி-யின் செல்வாக்கு சரிந்தது என்பதை, இந்தத் தேர்தல் தேசத்துக்குப் பறைசாற்றப் போகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர் சச்சின் பைலட் தலைமையில் 110 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். பி.ஜே.பி. 75 இடங்களைப் பிடிக்கும். சுயேச்சைகள் 10 இடங்களைப் பிடிக்கும்".

தெலங்கானா (119 தொகுதிகள்): 

``ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த டி.ஆர்.எஸ். கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திரசேகரராவ், தன்னை இவ்வளவு சீக்கிரம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அவரேகூட யூகிக்க முடியாத அளவு, இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்படுவார். புதிய மாநிலம், புதிய முதல்வர் எனச் சரித்திரம் படைத்த சந்திரசேகர ராவ் ஆட்சி முடிவுக்கு வரும். மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 65-க்கும் கூடுதலான இடங்களை காங்கிரஸ் - தெலுங்குதேசம் கூட்டணி பெறும். 40 இடங்கள் வரை சந்திரசேகர ராவும், இதரக் கட்சிகள் 10 இடங்கள் வரையும் பிடிக்கக்கூடும்".

சத்தீஸ்கர் (90 தொகுதிகள்): 

``மாநிலத்தில், தொடர்ந்து 15 ஆண்டுகாலமாக பி.ஜே.பி ஆட்சி நடக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரு கட்சிகளும் தலா 40 தொகுதிகள் என்ற அளவில் ஏறக்குறையச் சரிசமமான அளவில் வெற்றிபெறும். காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற அஜித் ஜோகி, ஜனதா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைக்கும் அதிசயம் நடக்கும்".

மிசோரம் (40 தொகுதிகள்):

``மிசோரம் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருக்கும் லால் தன்வாலா தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்திக்கிறது. இந்த முறை இங்கு, மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எப்) என்ற மாநிலக் கட்சி 15 இடங்களுக்கும் மேலாகப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்னொரு மாநிலக் கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.,) 10 இடங்கள்வரை பிடிக்கும். காங்கிரஸ் கட்சி இந்தமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலக்கட்சிகளின் ஆட்சி ஏற்படும்".

வாக்குப்பதிவு எப்படியிருக்கும்?

``மத்திய பிரதேசம் - 75 சதவிகிதம் (கடந்த தேர்தலில் 71 சதவிகிதம்). ராஜஸ்தான் - 66 சதவிகிதம் (75 சதவிகிதம்); தெலங்கானா - 66 சதவிகிதம் (69 சதவிகிதம்); சத்தீஸ்கர் - 70 சதவிகிதம் (76 சதவிகிதம்); மிசோரம் - 73 சதவிகிதம் (81 சதவிகிதம்)" என்று லோகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

எத்தனை கருத்துக் கணிப்புகள் வந்தாலும், மக்கள் வாக்குப்பதிவின்போது என்ன நினைக்கிறார்கள் என்பதே, அந்தந்த மாநிலங்களுக்கான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் என்ன சொல்லப்போகிறது என்பதை டிசம்பர் 11-ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்