பதம்சி மறையலாம்... `லிரில் கேர்ள்’ மறையாது! #RIPPadamsee | liril girl to hamara bajaj advertisement guru Alyque Padamsee passed away

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (19/11/2018)

கடைசி தொடர்பு:18:54 (19/11/2018)

பதம்சி மறையலாம்... `லிரில் கேர்ள்’ மறையாது! #RIPPadamsee

விளம்பர உலகின் குருவாகக் கருதப்பட்ட அலிக் பதம்சி மரணமடைந்தார்.

பதம்சி மறையலாம்... `லிரில் கேர்ள்’ மறையாது! #RIPPadamsee

விளம்பரம் செய்யப்படாமல் சந்தைக்கு வரும் பொருள்கள் உண்டா? பல ஆயிரம் கோடி புரளும் துறை விளம்பரத்துறை. `லிண்டாஸ் பாம்பே' இந்தியாவின் முன்னணி விளம்பர நிறுவனம். உலகப் புகழ்பெற்ற இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்தான் அலிக் பதம்சி. லிரில் கேர்ள் முதல் ஹமாரா பஜாஜ் வரை மக்கள் மத்தியில் பிரபலமான பல விளம்பரங்கள் இவரின் கைவண்ணத்தில் உருவானவையே. இரு நாள்களுக்கு முன் பதம்சி தன் 90 வயதில் இறந்து போனார். நடிகர், எழுத்தாளர், படத் தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பதம்சிக்கு மூன்று மனைவிகள், நான்கு குழந்தைகள். குஜராத்தில் பணக்கார கோஜா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பதம்சியின் சகோதரர் அக்பர் பதம்சி மிகச்சிறந்த ஓவியர்!

`லிரிள் கேர்ள்' என்ற அந்த விளம்பரம் 1990-களில் சக்கைப் போடு போட்டது. எப்போது இந்த விளம்பரம் டிவி-யில் வருமென்று மக்கள் காத்துக் கிடப்பார்கள். லிரில் கேர்ள் விளம்பரத்தில் நடித்தால் எளிதில் பாலிவுட் வாய்ப்பும் கை கூடும். ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோன் ஆகியோர் லிரிள் கேர்ள் விளம்பரத்தில் மாடலாக அறிமுகமாகி பிற்காலத்தில் பாலிவுட்டில் கோலோச்சியவர்கள்.

விளம்பரக் குரு பதம்சி

பதம்சியின் இயக்கத்தில் வெளியான சர்ஃப், காமசூத்ரா, ஹமரா பஜாஜ் போன்ற விளம்பரங்களும் அதிகம் பேசப்பட்டவை. லிண்டாஸ் விளம்பர நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது அவர் உருவாக்கிய சிஷ்யர்கள் அதிகம். இந்தியாவின் முன்னணி விளம்பர நிறுவனங்களில் தற்போது அவர்கள்தான் முக்கியப் பதவியில் உள்ளார்கள். லிண்டாஸ் நிறுவனத்துக்கு பதம்சி 14 ஆண்டுக் காலம் தலைவராக இருந்தார். கடின உழைப்பும் கிரியேட்டிவிட்டியும் கொண்ட பதம்சியால்தான் லிண்டாஸ் நிறுவனம் உலகின் முன்னணி விளம்பர நிறுவனமாக மாறியது. தன் வாழ்க்கையில் 100 பிராண்டுகளை பதம்சி உருவாக்கியிருக்கிறார். விளம்பர உலகின் ஆஸ்கர் விருதாகக் கருதப்படும் `Clio Award - Hall Of Fame’ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியர் இவர்தான்.

தன் வாழ்நாள் முழுவதையும் விளம்பரத்துறைக்கே அர்ப்பணித்த பதம்சி, நவம்பர் 17-ம் தேதி மும்பையில் இறந்தார். பதம்சியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். பதம்சி விளம்பரத்துறையில் மட்டும் இல்லை சிறந்த நடிகராகவும் மிளிர்ந்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற `காந்தி' என்ற படத்தில் நடித்திருந்தார்.

1982-ம் ஆண்டு `காந்தி' திரைப்படம் வெளியானது. படத்தை இயக்கிய அட்டன்பாரோ பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் கேரக்டரில் நடிக்க ஆள் தேடிக் கொண்டிருந்தார். காந்தி வேடத்தில் பென் கிங்ஸ்லி நடித்தார். கஸ்தூர்பா வேடத்தில் ரோகிணி ஹட்டா, ஜவஹர்லால் நேரு வேடத்தில் ரோஷன் ஷேத், வல்லபாய் பட்டேல் வேடத்தில் சயீத் ஜேஃப்ரி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேருமே புகழ்பெற்ற நடிகர்கள்.

ஆனால், அட்டன்பாரோவுக்கு ஜின்னா வேடத்தில் யாரை நடிக்க வைக்க என்பதில் குழப்பம் இருந்தது. அட்டன்பாரோ எதிர்பார்த்த மாதிரி நடிகர்கள் செட் ஆகவில்லை. ஜின்னா எப்போதுமே அதிகாரத் தோரணையுடன் இருப்பார். அதே முகம் பதம்சியிடம் இருந்தைக் கண்டார்  இறுதியில் காந்தி படத்தில் ஜின்னா வேடத்தில் பதம்சியை அட்டன்பாரோவை நடிக்க வைத்தார். ஆயிரக்கணக்கான விளம்பரங்களை எடுத்திருந்தாலும் இந்த ஒரே ஒரு படத்தில் நடிகராக மாறி கலக்கியிருந்தார்.

சில இழப்புகளை எவற்றாலும் ஈடுகட்ட முடியாது... பதம்சியின் இழப்பு விளம்பரத்துறைக்கே பெரும் இழப்பு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்