வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (19/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (19/11/2018)

``கேரளாவில் நடப்பது ஹிட்லர் ஆட்சியா?” -விளாசும் ரமேஷ் சென்னிதாலா!

ஹிட்லரின் ஆட்சி கேரளாவில் நடப்பது போல் இருக்கிறது என பினராயி விஜயனைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா.

ரமேஷ் சென்னிதாலா

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பெண்கள் பலர் சபரிமலை செல்ல ஆயத்தம் ஆகி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் திரிப்தி தேசாய், சபரிமலை செல்ல கொச்சி வந்த அவரால் சபரிமலை செல்ல முடியவில்லை. இருப்பினும் `மீண்டும் வருவேன்' என்று கூறிவிட்டு புனே திரும்பியுள்ளார். இவரைப் போல் பல பெண்கள் சபரிமலை வருகை தரவுள்ளனர். இவர்களுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சபரிமலை விஷயத்தில் பினராயி விஜயனின்
 அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஐயப்ப பக்தர்களை சங் பரிவார் அமைப்புகளின் `பிராண்ட்' ஆக மாற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. நடைபாதையில் தங்கும் அப்பாவி பக்தர்கள் எல்லாம் கைது செய்யப்படுகின்றனர். இது அனைத்தும் போலீஸாரின் உயர் மட்ட நடவடிக்கை. போலீஸ் கைது செய்துள்ளவர்கள் எல்லாம் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிடையாது. அவர்கள் போய் சபரிமலையில் பிரச்னை ஏற்படுத்தப்போவதில்லை. மலைக்குச் சென்று பிரச்னை ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை கைது செய்யட்டும். தங்களின் பிரார்த்தனைக்காக மலைக்கு வரும் உண்மையான ஐயப்ப பக்தர்களின் கைதை ஏற்க முடியாது. தற்போது இங்கு நடப்பது ஹிட்லர் ஆட்சியா எனத் தெரியவில்லை" எனக் கடுமையாகச் சாடினார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க