வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (20/11/2018)

கடைசி தொடர்பு:10:00 (20/11/2018)

சபரிமலையில் போலீஸை குவிக்க என்ன காரணம்? -கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முதல் சபரிமலையில்  பரபரப்புக்குப் பஞ்சமில்லை. தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலை, பம்பா, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. 

சபரிமலை

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று சந்நிதானத்துக்கு அருகே, நடைப்பந்தல் பகுதியில் தங்கியிருந்த பக்தர்கள் சுமார் 50 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இது, கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்று நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராமசந்திர மேனன் மற்றும் அனில் குமார் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், சபரிமலையில் போலீஸாரின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர். மேலும்,  ``சபரிமலையில் சுமார் 15,000 போலீஸாரை குவிக்கக் காரணம் என்ன? கோயில், பக்தர்களுக்கானது. பிற்பகலுக்கு மேல் வரும் பக்தர்கள் அங்கு தங்கி, அடுத்த நாள் அபிஷேகம் செய்துவிட்டுதான் செல்வர். அவர்களை அங்கு தங்கக் கூடாது என யார் உத்தரவு பிறப்பித்தார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கைசெய்தனர்.  இந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சகம் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 144 தடை உத்தரவை மீறிச் செயல்பட்டவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். 

கேரள உயர் நீதிமன்றம்

மேலும், பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்றம், சந்நிதானத்துக்கு அருகே, பக்தர்கள் ஓய்வெடுக்க முடியாதபடி தண்ணீர்  ஊற்ற போலீஸாருக்கு உத்தரவிட்டது யார்? சபரிமலையில் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், சபரிமலை பக்தர்களை நிர்வாகம்செய்த அனுபவம் என்ன? சபரிமலையில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன போன்ற தகவல்களைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நடைப்பந்தல் பகுதியில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர்மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியது. 

பக்தர்கள்

Photo: PTI

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் கூறப்பட்ட அரசு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பெயரில் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமா? இதில் மாநில அரசின் பங்கும் பொறுப்பும் இருக்கிறது. அதை அறிந்து செயல்பட வேண்டும் என்றது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் இருப்பதாக நீதி மன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நடைப்பந்தல் பகுதியில் எத்தனை பக்தர்கள் தங்கலாம் போன்ற தகவல்களை தேவசம்போர்டு தாக்கல்செய்ய உத்தரவிட்ட   நீதிபதிகள், வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.