வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (20/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (20/11/2018)

`நந்திஷ் - சுவாதி உடல்கள் 2 நாள்கள் இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டன!’ - எஃப்.ஐ.ஆரில் தகவல்

சமீபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதி நந்திஷ் - சுவாதி சடலங்கள் தனித்தனியாக கண்டறியப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நந்திஷ்


இது தொடர்பாக `எவிடன்ஸ்’ கதிர், ``நந்திஷ் - சுவாதி சடலங்கள் ஒன்றாக கிடந்தன என்றே பல தமிழ் பத்திரிகைகள் எழுதி இருந்தன. இது தவறான தகவல். நந்திஷ் சடலம் 13 நவம்பர் அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கிடைத்திருக்கிறது. சுவாதியின் சடலம் இரண்டு நாள்கள் கடந்து 15 நவம்பர் அன்று காலை 11.30 மணிக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு சடலத்துக்கும் தனித் தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கன்னடத்தில் இருந்த முதல் தகவல் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து பதிவு செய்திருக்கிறோம். அவற்றின் விவரம். `முதல் தகவல் அறிக்கை: 13.11.2018 அன்று மதியம் 1.30 மணியளவில் நான் மண்டியா நகரத்தில் எஸ்.பி மீட்டிங் முடித்துவிட்டு பெழகாவடி காவல்நிலையம் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தேன். பிளவ்னா கேபிசில் துணை இன்ஜினீயரான எம்.நவீன்குமார் எனக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து எஸ்.பி.ஆர் ஏரியில் சிம்சா பவர் ஹவுஸ் போகும் வழியில் சானல் கேட் அருகில் ஓர் அடையாளம் தெரியாத ஆண் உடல் தண்ணீரில் கவுந்து மிதந்து கிடந்தது.

குடும்பம்

கேட் ஆபரேட்டர் சிவக்குமார் பின்லிங்கையா என்பவர் எனக்குத் தெரிவித்தார். நீங்கள் வந்து விசாரணை செய்யுங்கள் என்று கூறினார். காவலர்களான ராகவேந்திரபாபு, ரகுகுமார், தசரததேவரமணி, ஜீப் டிரைவர் சுனில் குமார் ஆகியோர் சேர்ந்து அரசாங்க ஜீப்பில் (கேஏ11, ஜி288) மேற்கண்ட இடத்துக்கு மதியம் 3.30 மணிக்கு வந்தடைந்தோம். அங்கு வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஆணின் உடல் தண்ணீரில் மிதந்து உப்பிப்போய் கேட்டில் மாட்டிக் கொண்டிருந்தது. நீச்சல் வீரர்களை அழைத்து அந்த உடலை கரைக்கு கொண்டு வந்தோம். அந்தப் பிரேதத்துக்கு 20 முதல் 25 வயது இருக்கலாம். தோல் மிகவும் அழுகிப்போயிருந்தது. கண்கள் வெளியே வந்திருந்தன. நாக்கு கடித்தவாறு இருந்தது. நீலம் மற்றும் கறுப்பு நிறமுடைய முழுக்கை விளையாட்டு பனியன் அணிந்திருந்தார். பனியனின் இடது புறத்தில் ஜெய்பீம் சூடாகானபள்ளி என்று எழுதப்பட்டிருந்தது. இதன் நடுவில் அம்பேத்கரின் படம் இருந்தது. கறுப்பு பேன்ட் அதன் மீது பெல்ட் இருந்தது. பச்சைகலர் உள்ளாடை அணிந்திருந்தார்.

அதில் VEEYEM TEX என்று பொறிக்கப்பட்டிருந்தது. இரண்டு கால்களிலும் துணியால் இருக்கமாக கட்டப்பட்டிருந்தது. கழுத்தை பிரவுன் கலர் துப்பட்டாவால் இறுக்கமாக இறுக்கிய நிலையில் கொடூரமாக கொலை செய்து அந்தக் கொலையை மறைப்பதற்காக இறந்தவரின் எவிடென்ஸ் கதிர்உடலை தண்ணீரில் கொண்டு வந்து போட்டதாக கண்டறிய வருகிறோம். இந்த விவரங்களை சம்பவம் நடந்த இடத்திலிருந்து காவலர் ரகுராம் அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

கடந்த 15.11.2018 அன்று காலை சுமார் 11.30 மணியளவில் சிம்சா கேட் அருகே பணியில் இருந்த ஆப்ரேட்டர் எல்.சிவராஜ் பின்லிங்கையா, அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்து வந்து கேட்டில் மாட்டிக் கொண்டிருப்பதாக தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தார். நான் பணியிலிருந்தபோது அந்த இடத்துக்கு மதியம் சுமார் 12.30 மணியளவில் போய்ப் பார்த்தேன். அங்கு ஒரு பெண்ணின் அழுகிப் போன பிரேதம் கை, கால்கள் கட்டியிருந்த நிலையில் கேட்டில் மாட்டிக் கொண்டு மிதந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணுக்கு 18 முதல் 20 வயது இருக்கலாம். அந்தப் பெண்ணின் கைகள் பின்புறம் கட்டப்பட்டிருந்தது. இரண்டு கால்களும் துணியால் கட்டப்பட்டிருந்தது. பிரேதத்தின் மீது பிங்க் கலர் மேலாடை மற்றும் பூ பொறிக்கப்பட்ட பேன்ட் அணிந்திருந்தார். யாரோ அடித்துக் கொலை செய்து ஆதாரங்களை மறைப்பதற்காக தண்ணீரில் போட்டுள்ளனர். கடந்த 2 நாள்கள் முன்பு இதே இடத்தில் ஒரு ஆணின் உடலை நாங்கள் கண்டறிந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண்ணின் பிரேதம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது. நான் மேல் அதிகாரிகளுக்கு விவரங்களைத் தெரிவித்து அடுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.