வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (21/11/2018)

கடைசி தொடர்பு:09:30 (21/11/2018)

குறுக்கிட்ட மாடு; கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் - பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயரும் உயிரிழப்பு

ஒடிஷாவில் உள்ள மகாநதி ஆற்றில், நேற்று மாலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து

நேற்று மாலை, ஒடிஷாவின் தல்சேர் நகரிலிருந்து கட்டாக் பகுதிக்கு 50 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. சரியாக ஜகத்பூர் பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தை கடக்கும்போது, திடீரென எதிரே ஒரு மாடு வந்துள்ளது. அதன்மீது மோதக் கூடாது என்பதற்காகப் பேருந்தை திருப்பிய ஓட்டுநர், தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.  அதனால், பாலத்தில் இருந்த சிமென்ட் கைபிடிகளை இடித்துக்கொண்டு 30 அடி உயரத்திலிருந்து  மகாநதி ஆற்றில் பேருந்து பாய்ந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால், அங்கிருந்த மணலில் பேருந்து கவிந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தன் இரங்கலைத் தெரிவித்துள்ளார், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

மூன்று நாள்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஒடிஷா சட்டமன்ற கூட்டத்தில், கடந்த 10 வருடங்களில் ஒடிஷாவில் மட்டும் 43,312 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 61,884 பேருக்கு படுகாயமும் 57,937 பேருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.