வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (21/11/2018)

கடைசி தொடர்பு:15:35 (21/11/2018)

பெண்களின் கழிப்பறை சங்கடம் :  ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள 10 ரூபாய் உபகரணம்! 

பொதுக் கழிப்பறைகளைத் தவிர்க்க நினைக்கும் பெண்கள், கையடக்க அளவில் உள்ள இந்த உபகரணத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்லலாம்

ழிப்பறை பிரச்னை நாட்டின்  எந்தப் பகுதிக்குச் சென்றாலும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. சுத்தமான பொதுக் கழிப்பறைகளைப் பார்ப்பது என்பது அரிதாகவே உள்ளது. விமான நிலையங்கள் போன்ற சாமான்யர்கள் அதிகம் செல்லாத இடங்களில் வேண்டுமானால் கழிப்பறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன எனச் சொல்லலாம். 

பெண்களுக்கான கழிப்பறை உபகரணம்

இன்னொரு பக்கம் பணம் செலவழித்து செல்லும் திரையரங்குகள், தனியார் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட கழிப்பறைகள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்குத்தான் இருக்கின்றன. இதுபோன்ற இடங்களில்,  மிகவும் தவிப்புக்கும் அவஸ்தைக்கும் அதிகம் உள்ளாவது பெண்கள்தான். அருவருப்பாக உள்ள கழிப்பறைக்குச் செல்ல அஞ்சி, அவர்கள் தங்கள் இயற்கை உபாதைகளைக் கூட அடக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். மீறிச் சென்றால், சிறுநீர் தொற்றுக்கு உள்ளாக நேரிடுகிறது. 

இந்த நிலையில்தான், உலக கழிப்பறை தினத்தையொட்டி, டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் அகர்வால் மற்றும் ஹாரி ஷெராவத் ஆகிய 2 மாணவர்கள், தாங்கள் வடிவமைத்த, பெண்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கக்கூடிய வகையிலான புதிய உபகரணம் ஒன்றை ('stand and pee' device)  வெளியிட்டுள்ளனர்.  

இந்த உபகரணத்துக்கு 'சன்ஃபீ' (Sanfe) என்று பெயரிட்டுள்ள அவர்கள், வெளியில் செல்லும்போது பொதுக் கழிப்பறைகளைத் தவிர்க்க நினைக்கும் பெண்கள், கையடக்க அளவில் உள்ள இந்த உபகரணத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்றும், இந்த உபகரணம் அனைத்து வயது பெண்களுக்கும், குறிப்பாக இந்தியப் பெண்களின் உடை கலாசாரத்துக்கு  ஏற்ற வகையில் வெவ்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

``ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடக் கூடிய இந்த உபகரணம் ஒன்றின் விலை 10 ரூபாய். இந்த உபகரணத்தின் வெளிப்பூச்சு தண்ணீர் புகாதவாறும், எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் தூக்கி எறிந்த பின்னர் மக்கிப்போகும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.  

இந்த உபகரணத்தை வெளியில் செல்லும்போது ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கர்ப்பிணி பெண்கள், கீல் வாதத்தால் முழங்காலை மடக்கி உட்கார முடியாத வயதான பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு இது மிகவும் உதவிக்கரமாக இருக்கும். அத்துடன், பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்திலும் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

டெல்;லி ஐஐடி மாணவர்கள்

இந்த உபகரணம், அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் (AIIMS) பயன்படுத்தப்பட்டுச் சோதிக்கப்பட்டுள்ளது. #StandUpForYourself என்ற பிரசார ஹேஷ்டேக்குடன், உலக கழிப்பறை தினத்தையொட்டி  இந்த உபகரணம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பெண்களுக்கு இந்த உபகரணம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க