``பண மதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டது உண்மைதான்"- மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல் | It is true that farmers are affected by demonetisation says ministry of agriculture

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (21/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (21/11/2018)

``பண மதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டது உண்மைதான்"- மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல்

த்திய வேளாண் அமைச்சகம், நிதி தொடர்பான பாராளுமன்ற நிலைக் குழுவுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், `இந்தியாவில் மில்லியன் கணக்கான விவசாயிகள் தங்கள் குளிர்காலப் பயிர்களுக்கு விதைகளையும், உரங்களையும் வாங்க முடியவில்லை. இதற்குக் காரணம் பண மதிப்பிழப்புதான்' எனத் தெரிவித்துள்ளது. 

பண மதிப்பிழப்பு - விவசாய பாதிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபுவாவில் நேற்று நடந்த பேரணியில், `ஆழமான வேரூன்றி இருக்கும் ஊழலை அகற்றி, வங்கிக் கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக, ``கடுமையான மருந்தை" பயன்படுத்தி இருக்கிறேன்' என்று பேசியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நிதி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவிடம், செவ்வாய்க் கிழமை (20.11.2018) அன்று வேளாண் அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியோரின் தரப்பில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகள் பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
 
நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் கொடுத்துள்ள அறிக்கையில், ``விவசாயிகள் தங்கள் கரிப் பயிர்களை விற்கவோ அல்லது ரபி பயிர்களை விதைக்கவோ ஈடுபட்டிருக்கும் நேரத்தில் பண மதிப்பிழப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கைகளில் பெரும் அளவு பணம் தேவைப்பட்டது. இது சந்தையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் 263 மில்லியன் விவசாயிகள் பெரும்பாலும் பணப் பொருளாதாரத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பண மதிப்பிழப்பால் மில்லியன் கணக்கான விவசாயிகள் தங்கள் குளிர்காலப் பயிர்களுக்கு விதைகள் மற்றும் உரங்களை வாங்க போதுமான பணத்தைப் பெறவோ, பயன்படுத்தவோ முடியவில்லை. விவசாயிகளுக்குத் தினசரி ஊதியங்கள் கொடுப்பது மற்றும் வளர்ந்து வரும் பயிர்களுக்குத் தேவையான விவசாயப் பொருள்களை வாங்குதல் எனப் பல செயல்களுக்குப் பெரிய விவசாயிகள்கூட பிரச்னைகளை அதிகமாக எதிர் கொண்டனர். 

தேசிய விதைக் கழகம் கூடப் பண நெருக்கடி காரணமாக 1.38 லட்சம் குவிண்டால் கோதுமைகளை விற்பனை செய்ய முடியவில்லை. அரசாங்கம், பின்னர், ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய்களைக் கோதுமை விதை விற்பனைக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூடக் கோதுமையை விற்பனை செய்ய முடியவில்லை. அந்த அளவுக்குப் பண மதிப்பு இழப்பீட்டால் விவசாயம் முடக்கப்பட்டதை மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இக்கருத்தை ராஜஸ்தான், சண்டிகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் விவசாயிகள் பண மதிப்பிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டது உண்மைதான் என்ற கருத்தை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.