வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (21/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (21/11/2018)

``சபரிமலைக்கு வரும் ஆக்ட்டிவிஸ்ட்டிகளிடம் ஒரு கேள்வி'' - நடிகை ரஞ்சனி

டிகையும் சமூக ஆர்வலருமான ரஞ்சனி, `சபரிமலை தொடர்பான நல்ல தீர்ப்பு வரும்வரை நான் இங்கேதான் இருப்பேன்' என்று சொன்னதோடு, கேரளாவிலேயே இருந்தும் வருகிறார். அவரிடம், 'உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புப்படி தற்போது எல்லா வயதுப் பெண்களும் அங்கே வரும் சூழல் இருக்கிறதா?' என்று கேட்டோம். 

ரஞ்சனி

``எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குப் போகக்கூடாதுன்னு இப்ப வரைக்கும் இங்கே (சபரிமலையில்) பெண்கள் எதிர்த்துக்கிட்டுதான் இருக்காங்க. எங்களுடைய 'ரெடி டு வெயிட் ஃபார் சபரிமலை' அமைப்பினரும் சபரிமலைக்கு வருகிற 50 வயதுக்குள் இருக்கும் பெண்களிடம் 'சபரிமலையின் பாரம்பர்யத்தைக் காப்பாற்றுங்கள்' என்று வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்கிறோம். நான், சபரிமலையில் எல்லா வயதுப் பெண்களையும் அனுமதிக்காததில் எந்தப் பாலின பாகுபாடும் இல்லை என்பதைப் பெண்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன். 

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லண்டன் என உலகின் பல நாடுகளில் வசிக்கிற ஐயப்ப பக்தர்கள், எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்வதை எதிர்த்து, தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோக்களை எனக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.    

சபரிமலைக்கு ஆக்ட்டிவிஸ்ட் பெண்கள் வரும்போதெல்லாம் இங்கே நிலைமை மோசமடைந்து விடுகிறது. சபரிமலைக்கு வரத்துடிக்கிற ஆக்டிவிஸ்ட்களிடம் எனக்கு ஒரேயொரு கேள்வி கேட்க வேண்டும். உங்களுக்கு மதம் முக்கியமா; சமுதாயத்தின் அமைதி முக்கியமா? இனிமேல், இங்கு வரப்போகிற ஆக்ட்டிவிஸ்ட்களிடமும் நாங்கள் 'வர வேண்டாம்' என்று, வேண்டுதல்தான் வைக்கப் போகிறோம். சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்வது தொடர்பான மறு ஆய்வு மனு மீதான விசாரணை ஜனவரி 22-ம் தேதி நடக்கப் போகிறது. சபரிமலைக்கு எல்லாப் பெண்களும் வருவது ஐயப்பனுக்கே சம்மதமென்றால், நீங்கள் விருப்பப்பட்ட தீர்ப்பு வந்துவிடும். அதன்பிறகு சபரிமலைக்கு வரலாமே... அடிக்கடி ஒருவர் ஒருவராக வந்து தயவுசெய்து புனிதமான கோயிலை யுத்தகளமாக மாற்றாதீர்கள்.  கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுங்கள். இது என்னுடைய வேண்டுகோள். உங்கள் காலில் விழுந்துகூட இதைக் கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். இதற்கு மேல் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை'' என்பவரின் குரலில் மெலிந்து ஒலிக்கிறது.  

``மற்றபடி, ஐயப்பன் மேல் பக்தியுடன் சபரிமலைக்கு வரத்துடிக்கிற பெண்களுக்கெல்லாம்  நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். இங்கே பெண்களுக்கான கழிவறை, குளியலறை வசதிகள்  எதுவுமே இல்லை. ஆபத்து, அவசரத்துக்கு மருத்துவ உதவிக்கு மருத்துவமனைகள்கூட இல்லை. இவையெல்லாம் கட்டுவதற்கு நியாயமான கால அவகாசம் வேண்டாமா? பம்பை நதியிலும் தற்போது தண்ணீர் இல்லை. அதனால், அங்கும் குளிக்க முடியாது. அதனால், தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக வந்தால் அடுத்த வருடம் சபரிமலைக்கு வந்து ஐயப்பனைத் தரிசியுங்கள். இந்த வருடம் வேண்டாம் ப்ளீஸ்'' என்று முடித்தார் ரஞ்சனி!