வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (21/11/2018)

கடைசி தொடர்பு:21:20 (21/11/2018)

அந்தமான் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி!

அந்தமான்

அந்தமானில் உள்ள வட செண்டினல் தீவில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஜான் ஆலன் சாவ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தமானில் உள்ள பழங்குடியின மக்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்றும் பல்வேறு பழங்குடியின மக்கள் வெளி உலகுடன் தொடர்பில்லாமல் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒரு பழங்குடியின மக்கள்தான் செண்டினல் பழங்குடியின மக்கள். அந்தமானின் வட செண்டினல் தீவில் வசித்து வருகிறார்கள். வெளி உலகத்திலிருந்து யார் இவர்கள் பகுதிக்கு வந்தாலும் அவர்களுக்கு அது பிடிக்காது. அவர்கள் பகுதிக்கு வருபவர்களைத் தாக்கி கொன்று விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்திய அரசே அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், அங்கே சுற்றூலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது.   

இந்த நிலையில், 27 வயதுடைய ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க சுற்றுலாப் பயணி அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சுற்றுலா வந்திருந்தார். அவர் அந்த வட செண்டினல் தீவுக்குச் செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். நவம்பர் 14-ம் தேதி அதற்கான முயற்சிகள் பலவற்றைச் செய்தும் அந்த தீவுக்குச் செல்ல முடியவில்லை. அதன் பிறகு உள்ளூர் மீனவர்கள் சிலரின் உதவியுடன் சில தினங்களுக்கு முன் வட செண்டினல் தீவுக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில்தான் பழங்குடியின மக்களால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஜான் ஆலன் அந்தத் தீவுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்து கொடுத்த 7 மீனவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செண்டினல் பழங்குடியின மக்கள் அம்புகளாலும் இன்னும் சில கூரிய ஆயுதங்களாலும் அவரைக் கொன்றதாகத் தெரிகிறது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. செண்டினல் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே இருக்கும் என அறியப்படுகிறது. ஏற்கெனவே 2006-ம் ஆண்டு வழி தவறி வட செண்டினல் தீவில் கரை ஒதுங்கிய இரு மீனவர்களையும் ஏற்கெனவே அவர்கள் கொன்றுள்ளனர். 

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம், `அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருந்து வரும் அமெரிக்கப் பயணி குறித்த செய்திகளை நாங்கள் அறிந்திருக்கிறோம். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’’ என்று கூறியிருக்கிறது. அதேநேரம், அமெரிக்கப் பயணி குறித்த தகவல்களைத் தர அமெரிக்க தூதரகம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது.