ஊர்வலத்தில் மணமகன் மீது துப்பாக்கிச் சூடு! - 3 மணிநேர சிகிச்சைக்குப் பின் நடந்த திருமணம் | An Indian groom shot by two gunmen as he rode a chariot to his wedding in New Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (21/11/2018)

கடைசி தொடர்பு:21:40 (21/11/2018)

ஊர்வலத்தில் மணமகன் மீது துப்பாக்கிச் சூடு! - 3 மணிநேர சிகிச்சைக்குப் பின் நடந்த திருமணம்

டெல்லியில் நடந்த திருமணம் ஒன்றில் தன் தோளில் துப்பாக்கிக் குண்டை தாங்கியபடி மணமகன் திருமணம் செய்துகொண்டார். இது திருமணத்துக்கு வந்தவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

கல்யாண வீட்டில் கரன்ட் கட்டானாலே அசாம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதாகக் கூறி திருமணத்தை தள்ளிப்போடுபவர்களுக்கு டெல்லியில் நிகழ்ந்த இந்தத் திருமணம் நிச்சயம் வியப்பை ஏற்படுத்தியிருக்கும். அலைமோதும் மக்கள் கூட்டம். டெல்லியில் உள்ள தெரு ஒன்றில் ஆடல்பாடலுடன் மணமக்கள் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. மணமக்கள் குதிரையில் ஏறும் நிகழ்வுக்கு தயாராகின்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கூட்டத்திலிருந்து துப்பாக்கிச்சத்தம் ஒலிக்கிறது. ஆடலும் பாடலும் நிறுத்தப்பட்டு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அங்கிருந்த சிலர் ஓட ஆரம்பிக்கின்றனர். என்ன நடந்தது என சுதாரித்துக்கொள்வதற்குள், மணமகனின் தோள் மீது தோட்டா பாய்கிறது.

உடனே அப்பகுதியிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மணமகனின் தோளுக்குள் பாய்ந்த தோட்டாவை ஆபரேஷன் செய்யாமல் வெளியில் எடுக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்போதைக்கு ஏற்பட்ட ரத்தப்போக்குக்கு தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் மணமகன் மண்டபத்துக்கு திரும்பினார். தோளில் தோட்டாவை சுமந்தபடியே அவரின் திருமணம் நடந்தேறியது, அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு எந்த நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மணமகன் ஒருவர் இதேபோல திருமணத்தின்போது மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.