வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (21/11/2018)

கடைசி தொடர்பு:21:44 (21/11/2018)

`வாட்ஸ்அப்பில் ஆட்சியமைக்க உரிமைகோரிய எம்.எல்.ஏ!’ - ஜம்மு-காஷ்மீரில் சுவாரஸ்யம்

தங்களிடம் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். எங்களை ஜம்மு - காஷ்மீரில் ஆட்சிமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி அம்மாநில ஆளுநருக்கு எம்.எல்.ஏ சஜ்ஜத் கானி லோன் வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியும், பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தனர். கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அரசுக்கு அளித்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பதவி விலகுவதாக கூறி அம்மாநில கவர்னருக்கு மெஹபூபா முஃப்தி கடிதம் எழுதினார். இதை ஆளுநர் ஏற்றுக்கொண்டதையடுத்து கடந்த 3 மாதங்களாக அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைமுறையில் இருந்துவருகிறது. இந்த நிலையில், பீப்புள் கான்ஃபரன்ஸ் கட்சியின் தலைவரும், ஹிண்ட்வாரா தொகுதியின் எம்.எல்.ஏவுமான சஜ்ஜத் கானி லோன், அம்மாநில ஆளுநருக்கு வாட்ஸ்அப் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் `பா.ஜ.க-வுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.

மெஹபூபா முஃப்தி

 

எனவே, எங்களை ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,``ஆட்சியமைப்பது தொடர்பான கடிதத்தை ஆளுநருக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பினோம். ஆனால், ஃபேக்ஸ் வேலை செய்யவில்லை. அதனால், கவர்னர் பி.ஏ.வுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சியின் ஆதரவுடன் மெஹபூபா முஃப்தியும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரும் ஆளுநர் அலுவலகத்தில் ஃபேக்ஸ் வேலைசெய்யவில்லை எனவும், இதனால் ட்விட்டர் மூலம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு தரப்பினர் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், அம்மாநில சட்டசபையைக் கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார்.