எதிர்த்துப் பேசிய மனைவி... நாக்கை அறுத்த கணவன் - வரதட்சணைக்காக நிகழ்ந்த கொடூரம்! | UP Man Cuts off Wife's Tongue for Dowry Demands

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (22/11/2018)

கடைசி தொடர்பு:10:05 (22/11/2018)

எதிர்த்துப் பேசிய மனைவி... நாக்கை அறுத்த கணவன் - வரதட்சணைக்காக நிகழ்ந்த கொடூரம்!

உத்தரப்பிரதேசத்தில், தன்னை எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கை கணவன் அறுத்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தந்தையுடன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 -ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்காக ஆகாஷ் 12 லட்ச ரூபாய் செலவழித்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு  தான் செலவழித்த 12 லட்ச ரூபாய்க்கு ஈடாக வரதட்சணை கேட்டு தனது மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார் ஆகாஷ். வரதட்சணை கேட்டு பலமுறை கொடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இதற்கிடையே, கடந்த 6 -ம் தேதியும் வரதட்சணை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக, ஆகாஷை எதிர்த்துப் பேசியுள்ளார் அவரது மனைவி. 

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ்,  மனைவியின் நாக்கை அறுத்துள்ளார். பின்னர், தான் செய்த குற்றம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, நாக்கை அறுத்த பின் மனைவியைத் தனியறையில் அடைத்துவைத்துள்ளார். 10 நாள்களுக்கும் மேலாக அறையில் அடைபட்டிருந்தவர், ஒருவழியாக ஆகாஷிடமிருந்து தப்பித்து பெற்றோரிடம் சென்றுள்ளார் அந்தப் பெண். பின்னர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் எடுத்துக்கூறி, அவர்கள் உதவியுடன் ஆகாஷ் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், ஆகாஷின் தந்தையும் காவலர் என்பதால், புகார்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.  அதன் பின்னரே விவகாரம் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க