"வாட்ஸ்அப் பண்ணிருக்கோம் சார்...” காஷ்மீர் அரசியலில் ’பலே’ காட்சிகள்! | What is happening in the Kashmir politics?

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (22/11/2018)

கடைசி தொடர்பு:17:44 (22/11/2018)

"வாட்ஸ்அப் பண்ணிருக்கோம் சார்...” காஷ்மீர் அரசியலில் ’பலே’ காட்சிகள்!

`திடீர் கூட்டணி... கட்சிகள் ஆதரவு... ஆட்சியமைக்க உரிமை கோரல்... சட்டமன்றம் கலைப்பு... ‘ அனைத்தும், ஒரு சில மணி நேரங்களில் நடந்து முடிந்துவிட்டன. 

ளுநர் ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இரவு நேரத்தில் அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி முடிந்துள்ளன. மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) தலைவர் மெஹ்பூபா முஃப்தியும், மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சாஜத் கானி லோனும், ஒரே நேரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியதால், ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டமன்றத்தையே கலைத்துவிட்டார். 

காஷ்மீர்

இந்தியாவிலேயே வித்தியாசமான மாநிலம் காஷ்மீர். மாநிலம் என்பதைவிட, அது ஒரு சிறிய நாடு போன்றது. தனிக்கொடி, தனித்த அரசியலமைப்புச் சட்டம் போன்ற தனித்தன்மைகள் கொண்ட மாநிலம். சட்டமன்றத்தின் பதவிக்காலமும் மற்ற மாநிலங்களைப்போல 5 ஆண்டுகள் அல்ல 6 ஆண்டுகள். பாதுகாப்பு, வெளியுறவு, நீதி, தகவல்தொடர்பு ஆகிய நான்கு விவகாரங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மற்ற அனைத்தையும், மாநில அரசே தீர்மானித்துக்கொள்ளும்.

மொத்தம் 87 தொகுதிகளைக் கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்துக்கு, 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களை வென்று, தனிப்பெரும்பான்மை பெற்றது. பி.ஜே.பி. 25 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடம் வந்தது. அடுத்தடுத்த இடங்களை, தேசிய மாநாட்டுக் கட்சியும் (15), காங்கிரஸும் (12) பிடித்தன. ஆட்சியமைக்கத் தேவையான 44 இடங்கள் எந்தக் கட்சிக்கும் இல்லாத நிலையில், பி.டி.பி-யும் பி.ஜே.பி-யும் இணைந்து ஆட்சியமைத்தன. இவர்களின்  கூட்டணி ஆட்சி, 3 ஆண்டுகள் வரையே நீடித்தது. 

மெஹ்பூபாவுக்கு அளித்துவந்த ஆதரவை, கடந்த ஜூன் மாதம், பி.ஜே.பி. திடீரென விலக்கிக்கொண்டதால், அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த ஆளுநர் ஆட்சியும், டிசம்பர் 20-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியும், காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரின. இந்தக் கூட்டணி ஆட்சிக்கு, தேசிய மாநாட்டுக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. நம்மூர் `அ.தி.மு.க. - தி.மு.க.’ போன்ற எதிர்த் துருவக் கட்சிகளான பி.டி.பி-யும் - என்.சி-யும் கைகோத்தது, காஷ்மீரில் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. 

உமர் அப்துல்லா

இரவு 8.15 மணிக்கு ஆட்சியமைக்கும் `உரிமை கோரல்’ கடிதத்தை ஆளுநருக்கு `ட்விட்டர்’ சமூக வலைதளம் மூலம் அனுப்பிவைத்தார், மெஹ்பூபா. அதில், ``காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோருகிறேன்” என்று அறிவித்தார். இந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பி.டி.பி-யின் அல்தாஃப் புகாரி முதல்வராகப் பதவியேற்பார் என்று, அடுத்தடுத்து பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. 

 

சாஜத் லோன் கடிதம்

ஆனால், பி.ஜே.பி. வேறொரு திட்டத்தைச் செயல்படுத்தியது. இரண்டு எம்.எல்.ஏ-க்களை மட்டுமே கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சாஜத் கானி லோன், ``பி.ஜே.பி. ஆதரவு எனக்கு இருக்கிறது. எனவே, ஆட்சியமைக்க என்னை அழைக்க வேண்டும்” என்று, `வாட்ஸ் அப்’ மூலம், ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். அப்போது, இரவு 8.40 மணி. இருவரில், எவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இரவு 9 மணிக்கு, ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டமன்றத்தையே கலைத்து உத்தரவிட்டார். `திடீர் கூட்டணி... கட்சிகள் ஆதரவு... ஆட்சியமைக்க உரிமை கோரல்... சட்டமன்றம் கலைப்பு... ‘ அனைத்தும், ஒரு சில மணி நேரங்களில் நடந்து முடிந்துவிட்டன. 

சட்டமன்றக் கலைப்பு தொடர்பாக, காஷ்மீர் கட்சிகளுக்குப் பெரியளவில் அதிருப்தி இல்லை. `தேர்தல் வந்தால் நல்லது’ என்பதே பலரின் எதிர்பார்ப்பும். சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதால், விரைவில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது காஷ்மீர். அநேகமாக, நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, காஷ்மீர் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்படலாம். மாநில பி.ஜே.பி. தலைவர் ரவீந்தர் ரெய்னாவும், ``நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். 

அடுத்த அரசியல் திருப்பத்துக்காகக் காத்திருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். 


டிரெண்டிங் @ விகடன்