செயற்கை மழை டெல்லியைக் காக்குமா? - காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி | Artificial Rain To Tackle Delhi Pollution

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (22/11/2018)

செயற்கை மழை டெல்லியைக் காக்குமா? - காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி

செயற்கை மழை முறையானது ஏற்கெனவே மகாராஷ்டிராவிலும் லக்னோவிலும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காற்று மாசுபாட்டை எதிர்த்து புதுடெல்லி போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் செயற்கை மழையை ஏற்படுத்தவிருப்பது இந்தியாவில் இதுதான் முதல் முறை என்கிறார் ஐ.ஐ.டி கான்பூரின் இணை இயக்குநர்.

புது டெல்லி

இந்தியாவிலேயே மிக அதிகமான காற்று மாசுபாடுடைய நகரமாக அறியப்படுவது நாட்டின் தலைநகர் புது டெல்லிதான். அதிலும் வருடா வருடம் தீபாவளி சமயத்தில் காற்று மாசுபாடு இன்னும் அதிகரிக்கும். காற்று மாசுபாட்டைக் குறைக்க அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் பெரிதாக பலனில்லை. கடந்த சில நாள்களாக புது டெல்லியின் காற்று மாசுபாடு மிக மோசமாக அதிகரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதன் நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. புது டெல்லியில் செயற்கை மழையை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டின் அளவை இன்னும் குறைக்க முடியும் என ஆய்வாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். 

``செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான எல்லா தயாரிப்புகளையும் செய்துவிட்டோம். இஸ்ரோவிடமிருந்து ஆய்வு விமானம் ஒன்றையும் உதவிக்கு வாங்கியுள்ளோம். மேக விதையூட்டல் (Cloud Seeding) மூலம் செயற்கை மழையை உருவாக்கலாம். இந்த முறை ஏற்கெனவே மகாராஷ்டிராவிலும் லக்னோவிலும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காற்று மாசுபாட்டை எதிர்த்து ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பில் செயற்கை மழையை ஏற்படுத்தவிருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை'' என்கிறார் ஐ.ஐ.டி கான்பூரின் இணை இயக்குநர் மனிந்திரா அகர்வால். 

முன் தயாரிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும் செயற்கை மழையை எப்போது உருவாக்குவது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சாதகமான வானிலைக்குக் காத்திருக்கிறார்கள். மேக விதையூட்டல் என்பது சில்வர் ஐயோடைடு, உலர் பனிக்கட்டி மற்றும் உப்பு ஆகியவை அடங்கிய வேதிப்பொருள்களை மேகத்தில் தூவுவதன் மூலம் அதிகப்படியான மழையைப் பெறலாம். இதுதான் செயற்கை மழை. சீனா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த முறையில் செயற்கை மழையை உருவாக்குகின்றனர். 

ஐ.ஐ.டி கான்பூரின் மாணவர்களும், ஐ.ஐ.டி டெல்லியின் மாணவர்களும் இந்த சோதனை முயற்சிக்கு உதவியாக இருக்கிறார்கள். மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து இதற்கான யுக்திகளை மேற்கொள்கின்றனர். `முதல் சோதனை வெற்றியடைவதைப் பொறுத்து அடுத்தடுத்து செயற்கை மழையைக் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாமா வேண்டாமா' என முடிவெடுக்கப்படும் என மனிந்திரா கூறியுள்ளார். 

இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு கடைசியில் கைவிடப்பட்டது. கடந்த வருடமும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லி முழுவதும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம் என யோசனை தெரிவித்திருந்தார்.