'இன்டர்நெட் பேங்க்கிங் கட்!' - எச்சரிக்கும் எஸ்.பி.ஐ வங்கி | SBI asked its customers to register mobile number to their accounts

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (23/11/2018)

கடைசி தொடர்பு:08:20 (23/11/2018)

'இன்டர்நெட் பேங்க்கிங் கட்!' - எச்சரிக்கும் எஸ்.பி.ஐ வங்கி

எஸ்.பி.ஐ

ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. மத்திய அரசும் டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து ஊக்குவித்துவருவதால், இனி வரும் காலங்களிலும் ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இதுபோன்ற பணப் பரிமாற்றங்களின்போது நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இது தொடர்பாக  ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவருகிறது. அதன்படி, எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் எண்ணை கணக்குடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ' நவம்பர் 30-ம் தேதிக்குள் மொபைல் எண்ணை கணக்குடன் இணைத்துவிட வேண்டும். அப்படி இணைக்கப்படவில்லை என்றால், அவர்களின் இன்டர்நெட் பேங்க்கிங் சேவை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தப்படும்' என்று எஸ்.பி.ஐ வங்கியின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொபைல் எண்ணை இணைப்பது தொடர்பாக, ஜூலை 2017-ல் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், மொபைல் எண்ணைக் கணக்குடன் இணைக்காதவர்களுக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதைத் தவிர வேறு மின்னணு பரிவர்த்தனைகள் தொடர்பான வேறு எந்தவித சேவையையும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டுதலின்படியே எஸ்.பி.ஐ வங்கி தற்போது இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.