வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (23/11/2018)

கடைசி தொடர்பு:19:42 (23/11/2018)

சென்டினல்களைச் சந்தித்த முதல் ஆராய்ச்சியாளர்! - ஜான் ஆலன் கொலைகுறித்துச் சொல்வது என்ன? 

டந்த 1966-ம் ஆண்டு முதல் 91- ம் ஆண்டு வரை சென்டினல் மக்களைச் சந்திக்க ஆராய்ச்சியாளர் டி.என். பண்டிட் முயன்று கொண்டிருந்தார். இவர், பிரபலமான மானுடவியல் ஆராய்ச்சியாளர். அந்தமானில் உள்ள பல தீவுகளில் வசிக்கும் பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். சென்டினல் மக்களைச் சந்தித்த முதல் ஆராய்ச்சியாளர் இவர்தான். அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன் கொல்லப்பட்டது குறித்து டி.என். பண்டிட் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். 

சென்டினல்கள்

Photo Courtesy : Circa

''நான் சென்டினல்களைச் சந்தித்தபோது 80 முதல் 90 பேர் வரை அங்கே வசித்தனர். சென்டினல்கள் மிகவும் தனிமை விரும்பிகள். நாம்தான் அவர்களின் இடத்துக்குள் செல்கிறோம். நம்மை நோக்கி அம்பு விடுகிறார்கள் என்றபோதே, ஜான் ஆலன் சுதாரித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில், சென்டினல்களை நாம் தவறாகப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஜான் ஆலன் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். முதலில், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே விரும்புவார்கள். 1966-ம் ஆண்டு முதல் 91-ம் ஆண்டு வரை என் தலைமையிலான 7, 8 பேர் சென்டினல் தீவுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.  அந்தத் தீவில் தென்னை மரங்கள் கிடையாது. அதனால், நாங்கள் இளநீர் கொண்டுசென்றோம். 

சென்டினல்கள்

Photo Courtesy : Circa

தீவில் 18 குடிசைகள் இருந்தன. அம்புகள், வில்களை ஏராளமாகப் பார்க்க முடிந்தது.  அம்புகளைக் கூர்மைப்படுத்த இரும்பை அவர்கள் உபயோகித்தனர்.  முதலில், அவர்களிடத்தில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். நாங்கள் அப்படித்தான் ஒரு சென்டினலிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, பெரிய குழுவைச் சந்தித்தோம். கடலில் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி அவர்களிடத்தில் இளநீரைக் கொடுத்தோம். அப்போது, இளவயது சென்டினல் என்னிடம் வந்து, நான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியைப் பறித்தான். நான் அவனிடம் இருந்து அதைத் திரும்பப் பெற முயன்றேன். கோபமடைந்த அவன், என்னை நோக்கி கத்தியைக் காட்டி மிரட்டினான். உடனடியாக நான் பின்வாங்கிவிட்டேன். இத்தகைய அணுகுமுறைதான் இங்கே தேவை. ஜான் ஆலனை நோக்கி அம்புகள் வரும்போதே உஷாரடைந்து பின்வாங்கியிருக்க வேண்டும். சென்டினல்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்களின் வாழ்வியல், கலாசாரத்தைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் '' என்று தெரிவித்துள்ளார். 

தற்போது 83 வயதான  டி.என்.பண்டிட், 2015-ம் ஆண்டு வரை இந்தியப் பழங்குடியின  அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றியவர். 

Source : IndianExpress

நீங்க எப்படி பீல் பண்றீங்க