வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (23/11/2018)

கடைசி தொடர்பு:12:30 (23/11/2018)

`பினராயி விஜயன் என்னை வேட்டையாடுகிறார்!' - கொதிக்கும் கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர்

'மஞ்ஞேஸ்வரன் தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிடுவேன் என்பதால், முதலமைச்சர் என்னை வேட்டையாடுகிறார்' என கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன்

சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்ற கேரள பா.ஜ.க பொதுச் செயலளர் சுரேந்திரன், கடந்த 17-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர்மீது பிணையில் வரமுடியாத வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொட்டாரக்கரை சிறையில் அடைக்கப்பட்டார். சபரிமலை வழக்கில் ஜாமீன் கிடைத்தநிலையில், மற்றொரு வழக்கில் வாரண்டு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, சுதாகரன் மீது 9 வழக்குகள் உள்ளன. எனவே, அவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு காலதாமதம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொட்டாரக்கரை சிறையிலிருந்து ராணீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பா.ஜ.க பொதுச்செயலாளர் சுரேந்திரன் இன்று அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், "மஞ்ஞேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நான் வெற்றிப்பெற்றுவிடுவேன் என்பதால், முதலமைச்சர் பினராயி விஜயன் என்னை வேட்டையாடுகிறார். முதல்வர் அலுவலகத்தில் கூட்டாக ஆலோசனை நடத்தி, எனக்கு எதிராகப் பொய்வழக்குகள் போடுகின்றனர். இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல. சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன். நெஞ்சுவலி என பொய்கூறி நான் மருத்துவமனைக்குப் போக மாட்டேன்" என்றார்.

மஞ்ஞேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ சமீபத்தில் மரணம் அடைந்தார். நூறுக்கும் குறைவான வாக்குகளில் தோற்ற சுரேந்திரன், போலி வாக்காளர்கள் சம்பந்தமாக கோர்ட்டில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்திருந்தார். இந்த நிலையில், சுரேந்திரன் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.